×

எம்ஜிஆர் பாடல்கள் ஒலிக்க இறுதி ஊர்வலம்.. வடபழனியில் மயில்சாமியின் உடல் தகனம்.. திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!!

சென்னை: சென்னையில் மாரடைப்பால் காலமான பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.கமல்ஹாசனின் ‘நாயகன்’ படத்தில் மேக்கப் அசிஸ்டெண்ட், பிறகு ஸ்டண்ட் உதவியாளர், மிமிக்ரி கலைஞர், டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளர், காமெடி நடிகர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பன்முகங்கள் கொண்டவர், மயில்சாமி (57). சென்னை விருகம்பாக்கத்திலுள்ள வீட்டில் தனது மனைவி கீதா, மகன்கள் அன்பு, யுவன் ஆகியோருடன் வசித்து வந்தார். ஏற்கனவே அவருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில், 2வது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை ெதாடர்ந்து சிகிச்சை பெற்று உடல்நிலை தேறினார். இந்நிலையில், மகா சிவராத்திரியையொட்டி கேளம்பாக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டார். அப்போது அதிகாலை 3.30 மணியளவில், மயில்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனடியாக அவரை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மயில்சாமியின் உடல் சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) காலை அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.மயில்சாமி சிவபக்தர் என்பதால் அவருக்கு கைலாய வாத்தியம் இசைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, சண்டி மேளம் அடித்து சிவனடியார்கள் சிவபுராணத்தை பாடி நடிகர் மயில்சாமிக்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து எம்ஜிஆர் பாடல்கள் ஒலிக்க சாலிகிராமத்தில் இருந்து வடபழனியில் உள்ள மின்மயானத்திற்கு மயில்சாமி உடல் கொண்டுச் செல்லப்பட்டது. வழி நெடுகிலும் திரைத்துறையினர், மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து வடபழனியில் உள்ள மின்மயானத்தில் அவரது உடல் எரியூட்டப்பட்டது. மயில்சாமியின் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டபோது அங்கிருந்த திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுது மயில்சாமிக்கு பிரியா விடை அளித்தனர்..

Tags : MGR ,Mayilsamy ,Vadapalani , MGR, songs, procession., Vadapalani, Mylaswamy
× RELATED எம்ஜிஆர் கழகம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்