×

மாநிலம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் 2300 வரவேற்பு அதிகாரிகள் நியமனம்: டிஜிபி சைலேந்திர பாபு தகவல்

பொள்ளாச்சி: போலீஸ் வேலையில் சேர இளைஞர்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பதாகவும், மாநிலம் முழுவதும் போலீஸ் ஸ்டேஷன்களில் 2,300 வரவேற்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். பொள்ளாச்சி அருகே  ஸ்ரீ  சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் நேற்று மாலை நடந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு  முதல்வர், மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ‘நான் முதல்வன்’ என்ற சிறப்பான திட்டத்தை கொண்டு வந்துள்ளார். போலீஸ் அதிகாரிகள் அந்தந்த பகுதி கல்வி நிலையங்களுக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அதிலும் போதை பொருட்கள் ஒழிப்பு  பற்றிய விழிப்புணர்வு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நடத்தப்படுகிறது. போதை பொருட்கள் கூடாது என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பெருமளவில் போதைப்பொருள் கலாசாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா போன்ற பகுதியிலிருந்து போதை பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க  தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மொபைல் போனை பயன்படுத்தி நிறைய குற்றங்கள் நடக்கிறது. வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக, அதிலும் பெண்களை குறி வைத்து செயல்படுகின்றனர். லோன் ஆப் கொண்டு வந்து அதிக வட்டி கட்ட சொல்லி மிரட்டுகின்றனர். பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நிலையும் உள்ளது. ஆன்லைன் ரம்மியில் விளையாடி பலர் பணத்தை இழந்துள்ளனர். இதுபோன்றவை  விழிப்புணர்வால் மட்டுமே சாத்தியமாகும். எனவே மாணவர்களும், இளைய சமுதாயமும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் காவல் பணிகளில், சமீபத்தில் 10 ஆயிரம் காவலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. 1000 எஸ்ஐக்களுக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. 600 எஸ்ஐக்கள் இன்னும் சில வாரங்களில் தேர்வு செய்யப்பட உள்ளனர். போலீஸ்  துறையில் கடந்த இரண்டு  ஆண்டுகளாக பணி நியமனம் செய்யப்படுகிறது. போலீஸ் பணியில் சேர இளைஞர்கள்  ஆர்வமாக உள்ளனர். இனி போலீஸ் ஸ்டேஷன்கள் இனிமையாக காட்சியளிக்கும். அங்கு வரவேற்பு கிடைக்கும். இதற்காக, தமிழ்நாடு போலீஸ் ஸ்டேஷன்களில் 2300 பேர் காவல்நிலைய வரவேற்பு அதிகாரியாக நியமிக்கப்படுகின்றனர். இதன்மூலம், காவல்துறையின் சேவை தரம், சிறப்பாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.



Tags : DGP ,Shailendra Babu , Appointment of 2300 reception officers in police stations across the state: DGP Shailendra Babu informs
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...