திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே பள்ளி மாணவியின் இறுதி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் உயிரிழந்தார். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. கடந்த 14ம் தேதி காதில் அறுவை சிகிச்சை செய்ய திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அபிநயா அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்படவே, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 17ம் தேதி காலை அபிநயா இறந்தார்.
இந்நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்பின் பிரேத பரிசோதனை நடைபெற்றது. பிரேதர பரிசோதனையில் திருப்தி இல்லை என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் இல்லம் சென்று முறையிட்டனர். பின்னர் நீதிபதியின் அறிவுரையை ஏற்று உடலைப் பெற்று, நேற்று காலை 11.30 மணியளவில் திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலையில் உள்ள நந்தினியின் வீட்டில் பிரீசர் பெட்டியில் அவரது உடலை அஞ்சலிக்காக வைத்திருந்தனர்.
நந்தினியின் உறவினர்களும், அவரோடு படித்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பிரீசர் பாக்ஸ்சில் மின்சார கசிவு ஏற்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்டோர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனர். இதனையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் அஜித் (19) என்பவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். சவுமியா, சுந்தரி இருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.