திருப்பதி மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்: காயத்துடன் பயணிகள் தப்பினர்

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் ஜீப், இருசக்கர வாகனத்தை முந்தியபோது தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் பயணிகள் தப்பினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு திருப்பதியில் இருந்து திருமலைக்கு அரசு பஸ் ஒன்று நேற்று காலை வந்து கொண்டிருந்தது. பாஷ்யகார்ல சன்னதி அருகே உள்ள மலைப்பாதையில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த ஜீப் மற்றும் இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல அரசு பஸ் டிரைவர் முயன்றார்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்து  மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி மழைநீர் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த கால்வாயில் இரு சக்கரங்கள் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத நிலையில் சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல் நிலைய போலீசார் மற்றும் தேவஸ்தான போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்து பாதிக்காத வகையில் சரிசெய்து விபத்துக்குள்ளான பஸ்சை கிரேன் மூலம் சாலைக்கு கொண்டு வந்தனர்.   காயம் அடைந்த பக்தர்கள் திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: