அண்ணாநகர்: கோயம்பேடு காய்கறி, பழம், பூ, உணவு தானியம் ஆகிய மார்க்கெட்டில் அங்காடி நிர்வாகம் சார்பில் காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், கோயம்பேடு மார்க்கெட் 3ம் நம்பர் கேட்டில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ரகுபதி (44) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் ரகுபதி பணியில் இருந்துள்ளார். அப்போது, போதையில் பைக்கில் வந்த 2 பேர், மார்க்கெட்டுக்குள் நுழைய முயன்றுள்ளனர். அவர்களை மடக்கிய ரகுபதி, நேரம் முடிந்துவிட்டதால் உள்ளே செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த இருவரும், அவரை சரமாரி தாக்கிவிட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கோயம்பேடு பழ மார்க்கெட்டில் தங்கி கூலி வேலை செய்து வரும் மதியழகன் (38), அருண்குமார் (47) ஆகியோர், காவலாளியை தாக்கியது தெரிந்தது. அவர்களை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
