தாம்பரத்தில் நடைபெறும் திட்ட பணிகளை தலைமை செயலர் நேரில் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் திட்ட பணிகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். முதலில் குரோம்பேட்டை ராதாநகர் சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்தவர், அதனைத் தொடர்ந்து சேலையூர் அறிவுசார் மையம், ஆனந்தபுரம் சுகாதார நிலையம், மாநகராட்சி பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம், அன்னை அஞ்சுகம் நகர் கழிவறை கட்டிடப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, செயற்பொறியாளர் முருகேசன், மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது, கன்னடபாளையம் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றப்பட்டபிறகு தற்போது மாநகராட்சி குப்பைகள் தினமும் 350 டன் கொட்டப்படுவதால் அந்த பகுதி முழுவதும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பை கிடங்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டல தலைவர் காமராஜ், தலைமைச் செயலாளரிடம் மனு அளித்தார். அன்னை அஞ்சுகம் நகரில் ஆய்வு பணியில் ஈடுபட்ட தலைமைச் செயலாளர் இறையன்பு, அந்தப் பகுதியில் குடிசை வீடுகளில் வாழும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டார். அங்கு வசிக்கும் பெண்கள் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு உங்களுக்கு வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

Related Stories: