இந்தியாவை குத்தகைக்கு விடுவதை வேடிக்கை பார்க்க மாட்டோம்: ஈரோடு பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு காந்தி சிலை பகுதியில் நேற்று மாலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: இன்னொரு சின்னத்திற்காக வாக்கு கேட்டு என்னை பார்த்திருக்க மாட்டீர்கள். ஆபத்து காலத்தில் இதெல்லாம் பார்த்து கொண்டிருக்க முடியாது. சின்னம், கட்சி, கொடி இதெல்லாம் தாண்டியதுதான் தேசம். அதை காக்க வேண்டும் என்று வரும்போது யாருடன் கை கோர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

நான் இங்கு வந்தது லாபத்திற்காவோ, ஆதாயத்திற்காகவோ அல்ல. இவர்களிடம் கூட்டணி வைத்திருக்க வேண்டும் என்றால், எப்போது வைத்திருக்க வேண்டும். இதற்கு  ஒரு கதை சொல்கிறேன். நான் விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது என்னை தடுமாற வைத்து, வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார் (ஜெயலலிதா). அப்போது கலைஞர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பயப்படாதே, உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா? என கேட்டார். நான் வேண்டாம் ஐயா. இது நாட்டு பிரச்னை அல்ல. என் பிரச்னை. நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னேன்.

இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினும் போன் செய்து கேட்டார். விட்டு விடுங்கள் இது என் பிரச்னை என்றேன். அப்போது அல்லவா நான் அவர்களிடம் கூட்டணி வைத்திருக்க வேண்டும். ஆனால், நான் சுயநலத்திற்காக கூட்டணி வைக்கவில்லை. அந்த பிரச்னையில் இருந்து மீண்டு, என் கடனையெல்லாம் அடைத்து, எந்த லாபமும் எதிர்பார்க்காமல் இங்கு வந்துள்ளேன். நம் நாடு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும்.

அதற்கான முன்னோடி வேலைகளையெல்லாம் செய்த கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான இளங்கோவனுக்கு என் ஆதரவை கொடுப்பது ஒரு இந்தியனாக எனது கடமை.  ஒட்டுமொத்த இந்தியாவையும் குத்தகைக்கு விடுவதை நாங்கள் எப்படி வேடிக்கை பார்த்து கொண்டிருப்போம். இப்போது இந்த கூட்டத்துடன் நிற்பது எனக்கு பெருமை. கொள்கைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு, மக்களின் நலன் என்று வரும்போது, எது நியாயமோ, அதை செய்வதுதான் மய்யத்தின் ஆட்சி. பல விமர்சனங்களை கேட்டுவிட்டுத்தான் இது சரியான பாதை என்று தேர்ந்தெடுத்து வந்துள்ளேன் என்றார்.

Related Stories: