‘ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன்’ சிவசேனா கட்சி, சின்னத்தைப் பெற ஷிண்டே அணி ரூ.2,000 கோடி லஞ்சம்: உத்தவ் ஆதரவு எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: சிவசேனா கட்சியின் பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் ஷிண்டே அணி பெறுவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக சிவசேனா உத்தவ் ஆதரவு எம்.பி. சஞ்சய் ராவத் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே அணி என்றும், ஏக்நாத் ஷிண்டே அணி என்றும் பிரிந்த போது, இரு அணிகளும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று கூறின. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் இடையே தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் எனவே கட்சி சின்னமான வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி ஷிண்டே அணி தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்தது.

இதனை எதிர்த்து உத்தவ் அணி மனு தாக்கல் செய்தது. இது பற்றி விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் தேர்தல் கமிஷனுக்கு முதலில் இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த தடையை நீக்கியது. இதனை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் உத்தவ் தாக்கரே அணிகள் வில் அம்பு சின்னம் கோரி தாக்கல் செய்த மனுக்களை விசாரணை நடத்திய தேர்தல் கமிஷன் ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்று அறிவித்தோடு, சிவசேனா கட்சி பெயரையும், வில் அம்பு சின்னத்தையும் அந்த அணிக்கே வழங்கியது. இது உத்தவ் தாக்கரே அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தேர்தல் கமிஷனின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிவசேனா கட்சி பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் பெறுவதற்காக ஷிண்டே அணி சார்பில் ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்கவை எம்பி (உத்தவ் அணி) சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். தனது டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: சிவசேனா கட்சி பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் பெறுவதற்காக ரூ.2000 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆரம்பக்கட்ட பேரம்தான். இது 100 சதவீதம் உண்மையாகும். மாநிலத்தை ஆள்பவர்களுக்கு நெருக்கமான பில்டர் ஒருவர் இந்த தகவலை என்னிடம் கூறினார்.

நான் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமும் உள்ளது. அந்த ஆதாரத்தை விரைவில் வெளியிடுவேன். கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட ரூ.2,000 கோடி சின்ன தொகை அல்ல. இந்த ரூ.2000 கோடி பேரம்தான் தேர்தல் கமிஷனின் தீர்ப்பாகும். இன்னமும் பல ரகசியங்களை நான் விரைவில் வெளியிடுவேன். இது போன்று இந்திய வரலாற்றில் முன்பு எப்போதும் நடந்ததே இல்லை. இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.

Related Stories: