×

நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய 150 செயற்கைகோள்கள் விண்ணில் பாய்ந்தன: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது

சென்னை: நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் உருவாக்கிய, 150 செயற்கைகோள்களை சுமந்து சென்ற ‘ஹைபிரிட் சவுண்டிங்’ ராக்கெட் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. செயற்கைகோள்கள் விண்ணில் பாய்ந்ததை பார்த்து மாணவர்கள், விஞ்ஞானிகள், ெபற்றோர் கை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராமேஸ்வரத்தில் முன்னாள் இந்திய ஜனாதிபதியும், மூத்த விஞ்ஞானியுமான அப்துல் கலாம் நினைவாக, அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த, அறக்கட்டளை மூலம் 5 ஆயிரம் மாணவர்கள் ராக்கெட்டில் அமர்ந்து செல்வது போல் கனவு காணும் வகையில் 150 செயற்கைக்கோள்களை பொருத்தி ராக்கெட்டை விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் அரசு பள்ளிகளில் படிக்கும் 3,500 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  பின்னர், அவர்கள் படிக்கும் பள்ளிக்கே சென்று, ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்கள் தயாரிப்பது குறித்து வாரத்தில் இரண்டு நாள் என மொத்தம் 6 மாதங்கள் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் மூலம் ராக்கெட், செயற்கைக்கோள்களை தயாரிக்க அப்துல் கலாம் அறக்கட்டளைக்கு அதிக நிதி தேவைப்பட்டதால், நிதி வேண்டி பல்வேறு நிறுவனங்களை நாடியது. அப்போது, மார்ட்டின் குழும தனியார் நிறுவனமும், தமிழ்நாடு ஸ்பேஸ் ஜோன் இந்தியா தனியார் நிறுவனமும் நிதியுதவி அளித்தது. இதைத் தொடர்ந்து, 5 ஆயிரம் மாணவர்கள் 6 மாதங்களில் சவுண்டிங் ராக்கெட் மற்றும் 150 பிக்கோ செயற்கைக்கோள்களை தயாரித்தனர்.

பின்னர், விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவிடம் அனுமதி கேட்டனர். அதற்கு, இஸ்ரோ விஞ்ஞானிகள் உலக புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் வங்கக் கடலோரம் விண்ணில் செலுத்த அனுமதி வழங்கினர். இதையடுத்து, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டிடிடிசி ஓசோன் வியூவில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான வேலை தொடங்கப்பட்டது. மேலும், ஓசோன் வியூவில் இருந்து 5 கி.மீ. தூரம் கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளதால், செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அனுமதி மறுத்து, 15 கி.மீ. தொலைவில் உள்ள திருவிடந்தை காலி மைதானத்தில் இருந்து 7.30 மணி முதல் 7.45 வரை  ராக்கெட்டை விண்ணில் செலுத்த அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், நேற்று காலை 8.10 மணிக்கு திருவிடந்தையில் 150 பிக்கோ செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் ‘ஹைபிரிட் சவுண்டிங்’ ராக்கெட் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில், அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை, மார்ட்டின் குழும தனியார் நிறுவனம், தமிழ்நாடு ஸ்பேஸ் ஜோன் இந்தியா தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. சரியாக, விண்ணில் ஏவி 12 நொடிகளில் 6 கி.மீ. தூரத்தை சென்றடைந்து, 150 செயற்கைக்கோள்களும் ராக்கெட்டில் இருந்து பிரிந்து அதன் வேலையை தொடங்கியது.

மேலும், அதன் செயல்பாடுகளை மாமல்லபுரம் டிடிடிசி ஓசோன் வியூவில் இருந்து கனிணி மூலம் காற்றில் உள்ள நச்சுத் தன்மை, காற்றின் வேகம் மற்றும் ஈரப்பதம், ஆக்ஸிஜன் அளவு, ஹைட்ரஜன் அளவு ஆகியவற்றை கண்காணித்தனர். இதை அனைவரும் கைத்தட்டி ஆர்ப்பாரித்தனர்.  அப்போது ராக்கெட் தயாரித்த மாணவர்களின் பெற்றோர், பயிற்சி அளித்தவர்கள்  மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி: இந்தியா  சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதில், 60 வருடம்  செயற்கைக்கோள்களை இயக்கி உள்ளோம். இந்த நிகழ்ச்சியை, நான் முழுமையான  நிகழ்ச்சியாக பார்க்கிறேன்.

இதில், பங்கெடுத்த மாணவர்கள் அனைவரும்  நூற்றுக்கு நூறு, அரசு பள்ளி மாணவர்கள். நானும், அரசு பள்ளியில் பயின்றவன்  தான். இதில், கலந்து கொண்ட மாணவர்களும் அரசு பள்ளியில் படிக்கின்ற  மாணவர்கள் தான். இன்றைக்கு, உலக அளவில் பார்த்தால் அதிக பொறியாளர்கள்  இந்தியாவில் தான் உள்ளனர். அதிலும், தமிழ்நாட்டில் அதிகமானோர் உள்ளனர்.  இது, மட்டுமின்றி பொறியியல் பட்டதாரிகளாகவும் இருக்கின்றனர். இவர்களுக்கு,  படிப்புக்கு தகுந்தவாறு வேலைவாய்ப்பு அமையவில்லை எனக் கூறுகிறார்கள். அதை,  மாற்றும் முயற்சி இதுவாகும். இந்த, செயற்கைக்கோள் எல்லா  தொழில்நுட்பங்களையும் கலந்தது. கம்ப்யூட்டர், கெமிக்கல் இன்ஜினியரிங்,  பியூர் சயின்ஸ் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்தது.
ஸ்ரீஹரிகோட்டாவில், இருந்து  நிறைய ராக்கெட்டுகளை தயாரித்துள்ளோம். இந்த, ராக்கெட்டின் பெயர்  ‘சவுண்டிங் ராக்கெட்’. இது, 100 கி.மீ. வரை செல்லும். இதில், உள்ள ‘பே  லோடு’ என்ற கருவி காற்றின் வேகம், ஈரப்பதம் ஆக்சிஜன், ஹைட்ரஜன் அளவை  துல்லியமாக நமக்கு எடுத்து கீழே அனுப்பும். உலகிலேயே, முதல் முறையாக 150  செயற்கைக்கோள்களை தாங்கி செல்லும் ராக்கெட், இங்கு தான் விண்ணுக்கு  செலுத்தப்பட்டுள்ளது. அப்துல் கலாம் இருந்திருந்தால் இந்த குழந்தைகளை கட்டி  அணைத்து முத்தமிட்டிருப்பார். இவ்வாறு, இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி  அண்ணாதுரை கூறினார்.

நிகழ்ச்சியில், மார்ட்டின் குழும நிர்வாக  இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மார்ட்டின் அறக்கட்டளை நிர்வாக  அறங்காாவலர் லீமா ரோஸ், ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த்  மேகலிங்கம், அப்துல் கலாமின் அண்ணன் மகள் நஜீமா மரைக்காயர், அப்துல்  கலாமின் மருகன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், திருப்போரூர் எம்எல்ஏ  எஸ்.எஸ்.பாலாஜி, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ்,  மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.ஏ. சத்யா, மாணவ - மாணவிகள் 5  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvidantha beach ,Mamallapuram , 150 satellites made by 5,000 government school students across the country launched: Successful launch from Thiruvidanthai beach area near Mamallapuram
× RELATED மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு