வரும் 23ம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தெப்ப திருவிழா துவக்கம்: மார்ச் 2ல் தெப்ப உற்சவம்

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பதிருவிழா வரும் 23ம்தேதி தொடங்குகிறது. 26ம்தேதி கருட சேவையும், மார்ச் 2ம் தேதி தெப்பம் மிதவை உற்சவமும் நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தெப்பதிருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் 23ம் தேதி மாசி தெப்பத் திருவிழா தொடங்குகிறது.

முன்னதாக விழாவிற்கான திருப்பள்ளியோடம் ஸ்தம்ப ஸ்தாபனம் (முகூர்த்தக்கால்) நிகழ்ச்சி வரும் 22ம் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.மாசி தெப்பத்திருவிழா மார்ச் 3ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் மார்ச் 2ம் தேதி நடக்கிறது.

தெப்ப திருவிழாவின் முதல் நாளான 23ம் தேதி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரங்க விலாச மண்டபத்திற்கு காலை 8 மணிக்கு வந்து சேருகிறார். அதன்பின் ரங்கவிலாச மண்டபத்தில் இருந்தவாறு நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். திரளான பக்தர்கள் தெப்பத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். திருவிழாவையொட்டி ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியில் உள்ள கோயில் தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கி நடந்து வரும் நிலையில், தெப்பம் கட்டும் பணியும் நடந்து வருகிறது.

Related Stories: