×

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் கூடல்நகர் ரயில் நிலையம் முக்கிய ரயில்கள் தற்காலிகமாக இயக்கும் நிலையில் ஒரு வசதியும் சரியில்லையென பயணிகள் குற்றச்சாட்டு

மதுரை: மதுரை- திருமங்கலம் இடையே நடக்கும் இரட்டை அகல ரயில் பாதை பணிகள் காரணமாக அமிர்தா, வைகை, பாண்டியன் விரைவு ரயில்கள் தற்காலிகமாக கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் இங்கு எவ்வித வசதியும் சரியில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கூடல்நகர் ரயில் நிலையத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை - திருமங்கலம் இடையே இரட்டை அகல ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, கடந்த பிப்.16ம் தேதி முதல் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் கூடல்நகர் வந்து செல்கின்றனர். ஆனால் கூடல்நகரில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை ரயில்வே துறை இன்னும் செய்து கொடுக்கவில்லை. இங்கிருந்து இரவு புறப்படும் பாண்டியன் விரைவு ரயிலில் பயணிப்போர், அவர்களை வழியனுப்ப வரும் உறவினர்கள் வந்து செல்லும் போது கூடல்நகர் பாலத்தில் இருந்து ரயில் நிலையம் வரை செல்லும் சர்வீஸ் ரோடுகளில் 400 மீட்டர் தூரம் வரை விளக்குகள் வசதி துளியும் இல்லை. இது விபத்துகளுக்கு வழி வகுப்பதுடன், ‘திருட்டு’ பயத்திலும் அவர்கள் செல்ல வேண்டியுள்ளது.

இதுதவிர, ரயில் நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்ல போதிய பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், ரோட்டின் இருபுறமும் முட்கள் படர்ந்து, பஸ்சில் ஜன்னல் ஓரம் செல்வோரை ‘பதம்’ பார்க்கிறது. ரயில் நிலையத்தில் காத்திருப்பு வசதிகளுடன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். ரயிலில் செல்ல உள்ளோர் கடைசி நேரத்தில் குடிநீர் பாட்டில் வாங்குவதற்கு அலைமோதும் நிலை உள்ளது. ஏனென்றால், இங்கு ஒரு கடை கூட இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

அவசரத்திற்கு குழந்தைக்கு பால் வாங்கக்கூட வசதியில்லை. டூவீலர் வாகனங்களை நிறுத்த தற்காலிமாக கூட ஏற்பாடு செய்யவில்லை. இதனால் எங்கே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்ற குழப்பத்தில், பயணிகளை வழியனுப்ப வருபவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். இது தவிர ஒன்றிரண்டு நாட்களில் உடனடியாக திரும்பி விடலாம் என நினைப்பவர்கள் டூவீலரில் வந்து, ஸ்டாண்டில் நிறுத்தி விட்டுச்செல்வர். இதுபோன்று வருபவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ‘மதுரை மைய ரயில் நிலையத்தில் சகல வசதிகளும் இருப்பது பயணிகளுக்கு நிறைவை தருகிறது. அதேநேரம் கூடல்நகரில் இருந்து அமிர்தா, வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ்கள் தற்போது இயக்கப்படும் நிலையில், இங்கும் வசதிகள் செய்து தருவதில் கூடுதல் கவனம் காட்டப்பட வேண்டும். இந்த ரயில்கள் இங்கிருந்து இயக்கப்படும் என 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டும், போதிய வசதிகளை இதுவரை மேற்கொள்ளாதது ஏமாற்றத்தை தருகிறது. எனவே கூடல்நகர் ரயில் நிலையத்திற்கு என்ன வசதி செய்ய வேண்டும் என ஆய்வு செய்து, அதனை நிறைவேற்றுவதில் கூடுதல் வேகம் காட்ட வேண்டும்’ என்றனர். ரயில்வே நிர்வாகத்திடம் கேட்ட போது, ‘கூடல்நகர் ரயில் நிலையத்தில் வசதிகள் குறித்து கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் ஆய்வு செய்தார். விரைவில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.

Tags : Gudalnagar , Basic facility, Gudalnagar railway station, temporary running of trains,
× RELATED கிடப்பில் உள்ள கூடல்நகர் டெர்மினல்...