×

கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா முக்திக்கான பாதையின் வழிகாட்டியாக சிவன் திகழ்கிறார்: ஜனாதிபதி திரவுபதி முர்மு பேச்சு

கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா-2023 நேற்று இரவு நடந்தது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் தலைமை தாங்கினார். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசியதாவது: சிவனாக இருக்கும் அனைத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். உலகிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள், பக்தி மற்றும் ஞானத்தின் பாதை குறித்து பேசுகின்றன. அவை அனைத்திற்குமான மூர்த்தியாக சிவன் விளங்குகிறார். அவர் குடும்ப வாழ்க்கையிலும் இருக்கிறார். அதே வேளையில் சந்நியாசியாகவும் இருக்கிறார்.

அவர்தான் இந்த உலகின் முதல் யோகி மற்றும் முதல் ஞானி.  சிவன், கருணை கடவுளாகவும், ஆக்ரோஷமான வடிவமாகவும் இருக்கிறார். முக்திக்கான பாதையின் வழிகாட்டியாகவும் சிவன் விளங்குகிறார். ஆக்கும் மற்றும் அழிக்கும் சக்திகளில் ஒன்றிணைந்த குறியீடாகவும் இருக்கிறார். அறியாமை என்னும் இருளின் முடிவாகவும், ஞான பாதையின் திறப்பாகவும் மகாசிவராத்திரி விளங்குகிறது. வாழ்வின் உயரிய தேடல்களை கொண்டவர்களுக்கு இந்நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நவீன காலத்தின் போற்றத்தக்க ரிஷியாக விளங்கும் சத்குரு அவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நம்முடைய ஆன்மிக அம்சங்களை எண்ணிலடங்கா மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளார்.

குறிப்பாக, ஏராளமான இளைஞர்களை ஆன்மிக பாதையில் ஈர்க்கும் யோகியாகவும் இருக்கிறார். அவருடைய பேச்சு மற்றும் செயல்கள் மூலம் ஆன்மிகம் மட்டுமின்றி, சமூக பொறுப்புணர்வையும் கற்றுக்கொடுக்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்த பல பணிகளையும் அவர் முன்னெடுத்துள்ளார். இந்த நன்னாள் நமக்குள் இருக்கும் இருளை அகற்றட்டும். மேலும் வளர்ச்சியும் நிறைவும் நிறைந்த வாழ்வை நமக்கு அளிக்கட்டும். இவ்வாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார். விழாவில் சத்குரு ஜகி வாசுதேவ் பேசுகையில், மொழி, இனம், ஜாதி, கலாச்சாரம் போன்ற ஏராளமான முறைகளில் நாம் ஒருவருக்கொருவர் வேறுபட்டிருந்தாலும் நம்மை வெளிநாட்டவர்கள் ஒற்றை தேசத்தின் மக்களாகவே பார்க்கின்றனர்.

அதற்கு மிக முக்கிய காரணம், நாம் வாழ்நாள் முழுவதும் உண்மையை தேடும் தேடல்மிக்கவர்களாக இருக்கிறோம். நம்பிக்கையாளர்களாக அல்ல, எந்த பிரச்சனைகளின் போதும் நாம் முடிவுகளை தேடி செல்பவராக இல்லாமல், தீர்வு காணும் தேடல் மிக்கவர்களாக இருக்கிறோம். இந்த தேடலை இந்த  நாளில் மேலும் தீவிரப்படுத்துங்கள். இவ்வாறு சத்குரு ஜகி வாசுதேவ் பேசினார்.  பிரசித்தி  பெற்ற இசைக்கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகளோடு, இரவு முழுவதும் கோலாகலமாக  மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்ற பல ஆயிரம்  மக்களுக்கு, விசேஷமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட  ருத்ராட்சம், இலவசமாக வழங்கப்பட்டது.


Tags : Shiva ,Mahaasivaratri Festival Exhaustion ,Isha Yoga Centre ,Gov ,President ,Fluvupathi Murmu , Mahashivaratri Festival at Isha Yoga Center Coimbatore Lord Shiva is the Guide of the Path to Salvation: President Draupathi Murmu Speech
× RELATED ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை