×

ஆண்டுக்கு ரூ.80 கோடி முதல் 90 கோடி வரை நஷ்டம் பறக்கும் ரயில் திட்டத்தை மேம்படுத்த சிஎம்டிஏ மாற்றங்களை கொண்டு வருமா.?: பயணிகள் எதிர்பார்ப்பு

சென்னை: ஆண்டுக்கு ரூ.80 கோடி முதல் 90 கோடி வரை நஷ்டத்தில்  இயங்கும் பறக்கும் ரயில் திட்டத்தை மேம்படுத்த சிஎம்டிஏ  குழு புதிய மாற்றத்தை கொண்டு வருமா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். சென்னையின் முக்கிய பொது போக்குவரத்தாக பறக்கும் ரயில் திட்டம் விளங்குகிறது. பறக்கும் ரயில் திட்டம் 1997ல் சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே 8 கி.மீ தூரம் வரை இயக்கப்பட்டது.2வது பறக்கும் ரயில் திட்டம் 2007ம் ஆண்டு மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 12 கி.மீ வரை இயக்கப்பட்டது. 3வது பறக்கும் ரயில் திட்டம் வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5 கி.மீ தூரம் வரை 8 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் நிலம் கையகப்படுத்தும் பிரச்னை காரணமாக கால தாமதம் ஏற்பட்டு தற்போது தான் அந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மற்றொரு புறத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் வரை பயணிக்க கூடிய பறக்கும் ரயில் நிலையங்களில் 80 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணம் செய்கின்றனர். இதற்கு சரியான பராமரிப்பின்மை, பாதுகாப்புமின்மையே முக்கிய காரணங்களாக உள்ளது.

இதுகுறித்து கல்லூரி மாணவி அனிதா தெரிவிக்கையில், ‘‘நாங்கள் தினமும் கல்லூரி செல்ல ரயில் நிலையம் வரும் போது அதிகளவில் தூர்நாற்றம் வீசுகிறது,ரயில் நிலையங்களுக்குள் போதிய வெளிச்சம் இல்லை. திருடன் வந்தால் கூட கண்டுபிடிக்கக முடியாது. அதனால் இரவு 7 மணிக்கு மேல் பறக்கும் ரயில் நிலையங்களுக்குள் வருவதற்கே ஒரு விதமான பதற்றம் ஏற்படுகிறது’’ என்றார். பறக்கும் ரயில் திட்டம் மற்றும் அனைத்து பொது போக்குவரத்தையும் சீர் படுத்துவதற்காக கடந்த 2010 ஆண்டு அப்போதைய திமுக அரசு ஒன்றிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தை தொடங்கியது.

மக்களுக்கான பொதுபோக்குவரத்தை எளிமையாக்குவதற்காக இந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பறக்கும் ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க 18 ரயில் நிலையங்களை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 2 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு ரயில் நிலையங்களை சுற்றிலும் 500 மீட்டர் சுற்றளவுக்கு மெகா தெரு மூலம் சாலைகள் மேம்படுத்த உள்ளன. ஆண்டுக்கு ரூ.80 கோடி முதல் 90 கோடி வரை நஷ்டத்தில் இயங்கும் பறக்கும் ரயில் திட்டத்தை மேம்படுத்த சிஎம்டிஏ குழு புதிய மாற்றத்தை கொண்டு வரும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.



Tags : CMDA , Will CMTA bring changes to improve the Rs 80-90 crore loss-making train project?: Passenger Expectations
× RELATED ₹12 கோடியில் நவீனமயமாகிறது அம்பத்தூர்...