×

கழிவுநீர் குழாயில் கொசுவலை கட்டவில்லை என்றால் அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: கழிவுநீர் குழாய்களில் கொசுவலை கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இதுதொடர்பாக, சுகாதார அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 6 நாட்களில் மழைநீர்  வடிகால்களில் 2,449 கி.மீ நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும்,  2,478 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்புப்  புகை பரப்பியும், 25,435  தெருக்களில் கொசு ஒழிப்பு புகை பரப்பியும், நீர்நிலைகளில்  437 கி.மீ.  நீளத்திற்கு டிரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி  தெளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. 436 தெருக்களில் உள்ள  மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு  நீர்நிலைகளுக்கும் அனுப்பப்பட்டது.

கொசு ஒழிப்பு பணிகளை மேலும்  தீவிரப்படுத்தும் வகையில் மேயர் பிரியா நேற்று பொது சுகாதாரத்துறையின்  மூலம் வழங்கப்பட்ட 5 வாகனங்களை கொசுப்புழு ஒழிப்புப் பணிக்காக  தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆணையர் தலைமையில் கொசு ஒழிப்புப்  பணிகள் தொடர்பாக ஆய்வு  கூட்டம் நடந்தது.
கடந்த 7 நாட்களாக கொசு  ஒழிப்புப் பணிகள் 2 மடங்காக மேற்கொள்ளப்பட்டு  வருவதை மேலும்  தீவிரப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும்,  நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்த டிரோன்  இயந்திரங்களை கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு கொசு ஒழிப்பு   நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மழைநீர் வடிகால்களில் கொசு  ஒழிப்பு புகைப்பரப்புதல் மற்றும் கொசுப்புழு மருந்து தெளித்தல் பணிகளை  மேற்கொள்ள தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள்  தங்கள் சுற்றுப்புறத்தில்  தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள உபயோகமற்ற  பொருட்களை அகற்றி  கிணறு, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுப்புழுக்கள்  உற்பத்தியாகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். குளிர்பதனப் பெட்டியின்  கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரம் ஒரு  முறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும்  பொருட்களை அகற்றி, சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்.

இதுகுறித்து பொதுமக்களுக்கு சுகாதார அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் அமைக்கப்பட்டுள்ள  கழிவுநீர் தொட்டிகளில் கொசு உற்பத்தியை தடுத்திடும் வகையில் குழாய்களில் கொசு புகாவண்ணம் வலையை அவசியம் கட்டிட வேண்டும். அந்த  குழாய்களில் கொசுவலை கட்டப்படவில்லை என்றால் அபராதம் விதித்து நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சுகாதார  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Corporation , Penalty for not installing mosquito nets on drains: Chennai Corporation warns
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...