மனித வெடிகுண்டு, ஏகே 47 துப்பாக்கியுடன் பாக். காவல் நிலையத்தில் புகுந்து தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி; கராச்சியில் பதற்றம்

கராச்சி: கராச்சி காவல் நிலையத்திற்குள் பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் ஏகே47 துப்பாக்கியுடன் மனித வெடிகுண்டுகளாக புகுந்து நடத்திய பயங்கர தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் உள்ள காவல் நிலைய கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு 7.10 மணி அளவில் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) தீவிரவாதிகள் 3 பேர் மனித வெடிகுண்டுகளாக புகுந்தனர். காரில் வந்த அவர்கள் கையெறி குண்டுகளை வீசி காவல் நிலையத்திற்குள் புகுந்தனர். போலீசார் சுதாரிப்பதற்குள் காவல் நிலையத்தின் 4வது மாடிக்கு சென்ற தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தான்.

மற்ற 2 தீவிரவாதிகள் 5வது மாடியில் இருந்தபடி போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தகவலறிந்த துணை ராணுவப் படையினர் விரைந்து வந்தனர். துணை ராணுவமும், போலீசாரும் இணைந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் 3மணி நேரம் துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் பாதுகாப்பு படையினர் 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இந்த சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள், பொதுமக்களில் ஒருவர் மற்றும் 3 தீவிரவாதிகள் உட்பட 7 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட போலீசார் காவல் நிலையத்திலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு டிடிபி தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

Related Stories: