×

கவுரவமான ஸ்கோரை எட்டியது இந்தியா: முதல் இன்னிங்சில் ஆஸி. 1 ரன் முன்னிலை

புதுடெல்லி: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 1 ரன் முன்னிலை பெற்றது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. கவாஜா 81 ரன், கேப்டன் கம்மின்ஸ் 33, ஹேண்ட்ஸ்கோம்ப் 72* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஷமி 4, அஷ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் 13, ராகுல் 4 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ராகுல் 17 ரன் எடுத்து லயன் சுழலில் வெளியேற, தனது 100வது டெஸ்டில் விளையாடும் புஜாரா டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். ஷ்ரேயாஸ் 4 ரன் எடுத்து லயன் பந்துவீச்சில் ஹேண்ட்ஸ்கோம்ப் வசம் பிடிபட்டார்.

இந்தியா 66 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், கோஹ்லி - ஜடேஜா ஜோடி கடுமையாகப் போராடி 5வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்தது. ஜடேஜா 26 ரன் எடுத்து டாட் மர்பி சுழலில் எல்பிடபுள்யு ஆக, கோஹ்லி 44 ரன் (84 பந்து, 4 பவுண்டரி) எடுத்து அறிமுக சுழல் குனேமன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரீகர் பரத் 6 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, இந்தியா 50.5 ஓவரில் 139 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆல் ரவுண்டர்கள் அக்சர் படேல் - அஷ்வின் இணைந்து பொறுப்புடன் விளையாடி இந்தியா கவுரவமாக ஸ்கோரை எட்ட உதவினர். அக்சர் அரை சதம் விளாசி அசத்தினார். இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 114 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 80 ஓவருக்குப் பிறகு ஆஸ்திரேலியா 2வது புதுப் பந்தை எடுத்த உடனேயே அஷ்வின் 37 ரன்னில் (71 பந்து, 5 பவுண்டரி) கம்மின்ஸ் பந்துவீச்சில் ரென்ஷாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அக்சர் 74 ரன் (115 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), ஷமி 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, இந்தியா 262 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (83.3 ஓவர்). சிராஜ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் நாதன் லயன் 5 விக்கெட் கைப்பற்றினார் (29-5-67-5). குனேமன், மர்பி தலா 2, கம்மின்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 1 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கியது ஆஸ்திரேலியா. காயம் காரணமாக வார்னர் 2வது இன்னிங்சில் பேட் செய்ய முடியாமல் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக ரென்ஷா சேர்க்கப்பட்டார். தொடக்க வீரர்களாக கவாஜா, ஹெட் களமிறங்கினர். கவாஜா 6 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார். 2வது நாள் முடிவில், ஆஸி. 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 61 ரன் எடுத்துள்ளது. ஹெட் 39 ரன், லாபுஷேன் 16 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 9 விக்கெட் இருக்க, ஆஸி. 62 ரன் முன்னிலையுடன் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

Tags : India ,Aussies , India reach respectable score: Aussies in first innings 1 run lead
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...