×

நாடு முழுவதும் கூட்டுறவு துறையில் மறுசீரமைப்பு அவசியம்: அமித்ஷா அழைப்பு

புனே: நாட்டில் உள்ள கூட்டுறவுத் துறை அமைப்புகளில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார்.
மகாராஷ்டிராவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை குறைந்து தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டி அவர் கூறியதாவது: கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர்ப்புற வங்கிகள் மற்றும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளைப் பொறுத்தவரை, நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம்.  அதன்அடிப்படையில் கூட்டுறவுத்துறையை மறுசீரமைக்க வேண்டியது உள்ளது.

இதற்கு ஒன்றிய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்.  நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டது. எனவே கூட்டுறவு வங்கிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். மோடியின்  கூட்டுறவு சங்கங்கள் மூலம் செழிப்பு   என்ற சூத்திரத்தின்படி எந்த நிறுவனமும் எந்தவிதமான அநீதியையும் சந்திக்காமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்யும்.  கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான விவசாய நிதியை வழங்குவதற்கான இலக்கை அடைய, நாடு முழுவதும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களை அமைக்க வேண்டும். அவை புதிதாக தொடங்கப்பட்டு, கூட்டுறவு வங்கிகளின் பாதையில் உள்ள தடைகள் நீங்கி, மாவட்ட மற்றும் மாநில கூட்டுறவு வங்கிகள் சரியாக செயல்படத் தொடங்கினால், கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Amit Shah , Restructuring of co-operative sector is necessary across the country: Amit Shah calls
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...