தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிபுலிகள் இந்தியா வந்தன

புதுடெல்லி: இந்தியாவில் அழிந்துவிட்ட இனமாக கருதப்படும் சிவிங்கிபுலிகளை மீண்டும் அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒருபகுதியாக கடந்த ஆண்டு ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிபுலிகள் இந்தியா கொண்டு வரப்பட்டன. இவற்றை பிரதமர் மோடி தனது 72வது பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மத்தியப்பிரதேசத்தின் குனோ தேசியப்பூங்காவில் திறந்துவிட்டு நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று தென்னாப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கிபுலிகள் தனித்தனி பெட்டிகளில் அடைக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. விமானப்படைக்கு சொந்தமான விமானம் மூலமாக இவை மத்தியப்பிரதேசத்தின் குவாலியரை நேற்று காலை 10மணிக்கு வந்தடைந்தன. அதன் பின்னர் சுமார் 165கி.மீ. தொலைவில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு இவற்றை அதிகாரிகள் கொண்டு சென்றனர். பிற்பகலில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் ஆகியோர் சிவிங்கி புலிகளை தனிமைப்படுத்தல் முகாமில் திறந்து விட்டனர்.

இதன் மூலம் சிவிங்கி புலிகள் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. நேற்று கொண்டு வரப்பட்ட 12 சிவிங்கி புலிகளில் 7 ஆண் புலி, 5 புலிகள். இவற்றின் வயது 2 முதல் 8 வயது வரை இருக்கும் என்று  நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இவை அனைத்தும் அங்கு 700 சதுர  கிமீ பரப்பில் உள்ள வித்யாச்சல் மலைப்பகுதியில் 30 நாள் தனிமைப்படுத்தி வைக்கப்படும்.

Related Stories: