×

மலிவு விலையில் வீடுகளை வழங்க கிரெடாய் முன் வர வேண்டும் புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்படும். ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலையில் வீடுகளை வழங்க முன்வர வேண்டும் என்று கிரெடாய் உறுப்பினர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் சென்னை சார்பில் நேற்று கிரெடாய் பேர்ப்போ-2023 மற்றும் விஷன் 2030ஐ தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாகரிக மனிதரின் அடையாளங்களில் முக்கியமானதாக விளங்கும் வீட்டு வசதியினை தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உருவாக்கி தரக்கூடிய முயற்சியில் இந்த அரசு அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை என்பது எல்லோருக்குமான வளர்ச்சி என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என்பதுதான் அரசினுடைய நோக்கம்.

அந்த வகையில் கல்வி, வேளாண்மை, மருத்துவம், சிறு தொழில், பெண்கள் முன்னேற்றம், சுற்றுச்சூழல் போன்ற எல்லா துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம். மக்களுக்கு தேவையான வீட்டு வசதிகளையும், அனைவரும் பெற வேண்டும் என்ற அந்த நோக்கத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்க இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசைவாழ் மக்களின் வீட்டுவசதிக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அவர் அமைத்து தந்த பாதையில்தான் இன்று நம் மாநிலம் பெருமிதத்தோடு வளர்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில், 1991ல் ஒரு கோடியே 90 லட்சமாக இருந்த நகர மக்கள் தொகை, 2011ல் மூன்று கோடியே 49 லட்சமாக அதிகரித்து, 2031ல் 5 கோடியே 34 லட்சம் அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் 832 நகரங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீத மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நகரமயமாதலில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ‘எல்லாருக்கும் எல்லாம்’ என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டு, நாங்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம். மாநிலத்தின் வளர்ச்சி பணிகளில் எந்த ஒரு தனி மனிதரையும் விட்டுவிடக் கூடாது என்பதை கருத்தில்கொண்டு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் கவனம் செலுத்தி செயல்பட்டு வருகிறோம்.

இந்த அளவுகோலை அனைத்து திட்டங்களிலும் பொருத்தி பார்த்து செயல்படுத்தி வருகிறோம். வீட்டு வசதி துறையில் 2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பான, வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளித்தல், குடிசை பகுதிகளை மேம்படுத்துதல், நகரமயமாதலை மேம்படுத்துதல், நகரங்கள், புறநகர் பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களை வைத்துள்ளோம். தொழில் துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விண்ணப்பங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது. புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். வெளிவட்டச் சாலையின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

இதனால் வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் மகத்தான வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறேன். சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை, புதிய தொழில் நிறுவனங்கள் வருகை போன்றவற்றால், அவர்களுக்கான வாழ்விடங்கள் மற்றும் நிறுவனங்கள் இயங்குவதற்கான இடங்களின் தேவையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே, அதற்கேற்ப வீடுகள் மற்றும் வணிக இடங்களை உருவாக்கி வழங்கிடும் முக்கிய பொறுப்பை கிரெடாய் ஏற்க வேண்டும் என்று முதலமைச்சர் என்கிற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசை பொறுத்தவரையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள், நகர் ஊரமைப்பு இயக்ககம் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ஆகியவற்றின் மூலமாக திட்டங்களை தீட்டி, கொள்கைகளை வகுத்து, நகர்ப்புற வளர்ச்சி பணிகள் மற்றும் வீட்டு வசதி தேவைகளை பல்லாண்டுகளாக தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.

சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், நகராட்சி நிர்வாக இயக்ககம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் மற்றும் தடையின்மை சான்று வழங்கக்கூடிய துறைகள். இவை ஒற்றைச் சாளர முறையில் இணைத்து, தமிழ்நாட்டில் எந்த பகுதியாக இருந்தாலும், பொதுமக்கள் திட்ட அனுமதிக்கான ஒப்புதலை எளிதில் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆன்லைன் மூலம் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காலதாமதத்தை தவிர்க்கும் பொருட்டு, பல்வேறு துறைகளுக்கான பணிகளை ஒருங்கிணைத்து மனை, மனை உட்பிரிவு மற்றும் நில வகைப்படுத்துதலுக்கான செயல்முறை நேரலையில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். எனவே, கிரெடாய் உறுப்பினர்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொண்டு, மலிவு விலையில் வீடுகளை வழங்க முன்வர வேண்டும்.

துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, “தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களும், சாத்தியக்கூறுகளும் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் ரியல் எஸ்டேட் வணிகத்திற்கு, மிகப்பெரிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. வாருங்கள். இதற்கான பயணத்தில் இணைந்து நாம் எல்லோரும் பயனடைவோம்” என்று அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அதை இந்த இனிய வேளையில் உங்களிடையே நினைவுகூர விரும்புகிறேன். அந்த அடிப்படையில், நீங்களும் எங்களோடு இணைந்து பயணித்து, பயனடையுங்கள்.

தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கக்கூடிய நீங்கள், தொடர்ந்து உங்கள் ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் தரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் அபூர்வா, கிரெடாய் தமிழ்நாடு தலைவர் சுரேஷ் கிருஷ்ணன், கிரெடாய் சென்னை தலைவர்கள் சிவகுருநாதன், முகமது அலி, செயலாளர் கிருத்திவாஸ், பொருளாளர் அஸ்லாம், பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன், கிரெடாய் அமைப்பின் நிர்வாகிகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

* கிரெடாய் கோரிக்கையை அரசு பரிசீலிப்பதாக உறுதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசுகையில், ‘‘அகலம் குறைந்த சாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் தளப் பரப்பு குறியீட்டினை  அதிகரிக்க வேண்டுமென்று கிரெடாய் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை அரசு உரிய முறையில் பரிசீலித்து, சாதகமான முடிவை அறிவிக்கும். உயரமான அல்லது உயரம் இல்லாத கட்டிடங்களின் தளப் பரப்பு குறியீடானது, சாலையின் அகலத்தை பொறுத்து மேற்கொள்ளப்படும்.

தளப் பரப்பு  குறியீட்டினை அதிகரிக்கும் நேர்வில், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு  விலையில் வீடுகளை வழங்க இயலும். கட்டுமான பணியில் புதிய தொழில்நுட்பங்களை உலகத்தின் எப்பகுதியில்  இருந்தாலும் கொண்டு வந்து அவற்றை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தி, தரமான அதே சமயம் வாங்க தக்க விலையில் வீடுகளை வழங்க வேண்டும். 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில், தொலைநோக்கு பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது’’ என்றார்.

Tags : CREDAI ,Chief Minister ,MK Stalin , CREDAI must come forward to provide affordable housing New satellite cities will be created: Chief Minister MK Stalin's announcement
× RELATED மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு...