மகா சிவராத்திரி உற்சவம்: ராமேஸ்வரத்தில் நீராடி மணலில் லிங்கம் பிடித்து பக்தர்கள் வழிபாடு

ராமேஸ்வரம்: மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி மணலில் லிங்கம் பிடித்து வழிபட்டனர். மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். கடற்கரையில் வெளிமாநில பக்தர்கள் மணலில் லிங்கம் பிடித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அக்னி தீர்த்தத்தில் நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமி கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறந்து 5 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை நடைபெற்றது.

பின் சுவாமி-அம்பாள் சன்னதியில் கால பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு நடராஜர் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரத வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து திருக்கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் ராமநாதசுவாமிக்கு கங்கை அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஏராளமான வெளிமாநில சாதுக்கள் கங்கை நீருடன் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இன்று இரவு 8 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளிரத வீதியுலா நடைபெறுகிறது. சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்து விடிய விடிய அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும்.

Related Stories: