×

இன்று சனிப் பிரதோஷத்துடன் கூடிய மகா சிவராத்திரி விழா: தமிழக சிவாலயங்களில் விடிய விடிய பூஜை

சென்னை: மகா சிவராத்திரியையொட்டி பஞ்சபூத ஸ்தலங்கள் உள்பட தமிழக சிவாலயங்களில் இன்று இரவு தொடங்கி விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மாதந்தோறும் சிவராத்திரி உண்டு என்றாலும் மாசி மாதத்தில் வருவதே மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.  மாசி மாதம் தேய்பிறை திரயோதசி மற்றும் சதுர்த்தசி சந்திக்கும் நாள் இரவு மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருட மஹா சிவராத்திரி நாளான இன்று சிவராத்திரியும், சனி மகாபிரதோஷமும் இணைந்து வருவது இன்னும் கூடுதல் சிறப்பு.  மகா சிவராத்திரி நாளில் விடிய விடிய நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடைபெறும். மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அருகில் உள்ள சிவாலயங்களில் இரவில் நடைபெறும் பூஜைகளில் கலந்துகொள்வர். கோயிலுக்கு சென்று நான்கு ஜாம பூஜைகளில் பங்கேற்க முடியாதவர்கள் இரவு முழுவதும் வீட்டிலேயே நான்கு ஜாமங்களிலும் நான்கு கால பூஜையை முறைப்படி செய்வர்.

மகா சிவராத்திரியையொட்டி பஞ்சபூத ஸ்தலங்கள் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இன்றிரவு விடியவிடிய சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்ய உள்ளனர். பஞ்சபூத ஸ்தலங்களில் நீர்த்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. இன்று மாசி மகாசிவராத்திரியையொட்டி சிவராத்திரி சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. இரவு 11மணிக்கு முதல் ஜாமம், 1மணிக்கு 2ம் ஜாமம், 3மணிக்கு 3ம் ஜாம அபிஷேகங்களும், அலங்காரங்களும் வழிபாடுகளும் நடைபெறும். 3ம் கால நிறைவில் பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வருவார்கள்.

நிறைவாக 4ம் ஜாம பூஜை அதிகாலை 5மணிக்கு நடைபெறும். சிவராத்திரியையொட்டி இன்றிரவு முழுவதும் கோயில் நவராத்திரி கலைவிழா அரங்கில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த ஓமாந்தூரில் அன்னை காமாட்சியம்மன், மாசி பெரியண்ண சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் உருவ வழிபாடு கிடையாது. ஜோதி வழிபாடு மட்டுமே இங்கு நடைபெறும். மேலும், இக்கோயில் வளாகத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் திருநீறாக பக்தர்களுக்கு வழங்கப்படுவது மிகவும் சிறப்பானது. பாரம்பரியமிக்க இக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி இன்று காலை 8 மணிக்கு சிறப்பு வழிபாடு துவங்கியது. கோயிலில் உள்ள 64 பதிவுகளிலும் பெரிய பூசாரி தேவராஜ் ஜோதி ஏற்றி வழிபாட்டை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஏகாம்பரேஸ்வரர் மற்றும் சவுதாரி அம்மனுக்கு நள்ளிரவு பொங்கல் வைத்து நிவேதனம் படைக்கப்படுகிறது.

பின்னர், நாளை (19ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு நாச்சியாரம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க சீர் பொருட்கள் எடுத்துச் செல்லப்படும். 64 புது பானைகளில் செய்யப்பட்ட சுண்டல் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவசுவாமி கோயில் உட்பட அனைத்து சிவாலயங்களில் நள்ளிரவு நான்கு ஜாமங்களிலும் மகாசிவராத்திரி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறஉள்ளது. தஞ்சை பெரியகோயில், திருவையாறு ஐயாரப்பர் கோயில், அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் அட்சயலிங்க, தேவூர் தேவபுரீஸ்வரர், சிக்கல் சிங்கார வேலவர், கீழ்வேளூர் அங்காள பரமேஸ்வரி கோயில்களில் இரவு 9 மணி முதல் விடிய விடிய சிறப்பு வழிபாடு நடக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயூரநாதர் கோயில் உள்பட 10க்கும் மேற்பட்ட கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடக்கிறது. திருவாரூர் தியாகராஜ சுவாமி, கேக்கரை காசி விசுவநாதர், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் உள்பட பல்வேறு கோயில்களில் நடைபெறும் சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.


Tags : Maha Shivaratri Festival ,Sani Pradesha ,Vidya Pooja ,Tamil Nadu , Maha Shivratri Festival with Shanib Pradosha Today: Dawn Pooja in Tamil Nadu Temples
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்