×

முதல் முறையாக தமிழ்நாடு வந்தார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம்..!

மதுரை: 2 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வந்தார். குடியரசு தலைவராக பதவியேற்ற பின்னர் திரௌபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். 2 நாள் பயணமாக அவர் தமிழகத்திற்கு வந்துள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.45 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் குடியரசு தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதியை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர், மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோயிலில் குடியரசு தலைவருக்கு பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், கோயிலில் நடைபெறும் அன்னதான நிகழ்ச்சியிலும் கலந்துகொள்கிறார். அதன்பின், பிற்பகல் அங்கிருந்து விமானம் மூலம் புறப்பட்டு, மாலை 3.10 மணிக்கு கோவை பீளமேடு விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். மாலையில் கார் மூலம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு செல்கிறார்.

மாலை 6 மணிக்கு ஆதியோகி சிலை மற்றும் தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும் மகா சிவராத்திரி விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அவரை, ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு வரவேற்கிறார். இரவு 9.15 மணிக்கு ஈஷா யோக மையத்தில் இருந்து கார் மூலமாக புறப்பட்டு கோவை சுற்றுலா விருந்தினர் மாளிகை வந்து தங்குகிறார். நாளை (ஞாயிறு) காலை காரில் கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவு தூணில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பகல் 12 மணி அளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கோவை விமான நிலையம் திரும்பும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, தனி விமானத்தில் டெல்லி செல்கிறார். ஜனாதிபதி வருகையையொட்டி மதுரை, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,President of the Republic ,Threelapati Murmu ,Madurai Meenadashi Amman Temple , President Thirelapathi Murmu came to Tamil Nadu for the first time: Sami darshanam at Madurai Meenakshi Amman Temple..!
× RELATED ஜெகதீப் தன்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து