×

களக்காடு அருகே முயல் வேட்டையாடிய 10 பேருக்கு அபராதம்: செல்போன், பைக்குகள், நாய்கள் பறிமுதல்

களக்காடு: களக்காடு அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 10 பேருக்கு வனத்துறையினர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், பைக்குகள், நாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியில் சிலர் முயல் வேட்டையில்  ஈடுபடுவதாக திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் வன சரகர் யோகேஸ்வரன் தலைமையில் வனவர்கள் முத்தையா, ஜெபிந்தர்சிங் ஜாக்சன், வனக்காப்பாளர்கள் ராம்குமார்பதுமராகம், சார்லஸ்குமார், ஐயப்பன், பாலமுருகன், பரமசிவன் மற்றும் வேட்டைத் தடுப்புக்  காவலர்கள் அங்கு சென்று சோதனையிட்டனர்.

அப்போது வேட்டை நாய்களுடன் ஒரு  கும்பல் முயல்களை வேட்டையாடி கொண்டிருந்தனர். வனத்துறையினரை கண்டதும்  அவர்கள் தப்பி ஓடினர். எனினும் வனத்துறையினர் 10 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில் வேட்டையில் ஈடுபட்டு கைதானது ஏர்வாடியை சேர்ந்த மனோகரன் பாண்டியன் (48), நம்பிநகரை சேர்ந்த அருமைதுரை (36), தென்னிமலையை சேர்ந்த சிவா (26), பொன் (32), ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ரமேஷ் (38), டோனாவூரை சேர்ந்த ஜோசப் அன்பரசன் (33), வைகுண்டத்தை சேர்ந்த மலையாண்டி (27), கல்லத்தியை சேர்ந்த ராமமூர்த்தி (32), இளையநயினார்குளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் (50),

மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த பொன்ராஜ் (37) என்பதும், தப்பியோடியது  தங்கையத்தை சேர்ந்த லிங்கம் (33) என்பதும் தெரிய வந்தது. விசாரணைக்கு  பின்னர் 10 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 5 பைக்குகள், 7 செல்போன்கள், 4 வேட்டை நாய்களும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய லிங்கத்தை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Kalakadu , 10 people fined for rabbit poaching near Kalakadu: cell phones, bikes, dogs confiscated
× RELATED களக்காடு அருகே குழாய் உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு