×

நாசரேத் அருகே பிள்ளையன்மனை சர்ச்சில் புகுந்து ரூ.1 லட்சம் ஆம்ப்ளிபயர் கொள்ளை: மர்ம கும்பல் கைவரிசை

நாசரேத்: நாசரேத் அருகே சர்ச்சில் புகுந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள 3 ஆம்ப்ளிபயர்களை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள பிள்ளையன்மனையில் சிஎஸ்ஐ தூய பரமேறுதலின் ஆலயம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் ஆலயத்தின் வலதுபுறமுள்ள கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். முடியாததால் அங்கிருந்த 3 ஆம்ப்ளிபயர்களை திருடிச் சென்றனர். முன்னதாக அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை மர்மநபர்கள் வேறு திசையில் திருப்பியதோடு வயர்களை வெட்டியுள்ளனர்.

நேற்று காலை 7 மணிக்கு நடைபெறும் ஜெப நிகழ்ச்சிக்காக கோயில் பணியாளர் ஜோதிராஜ் ஆயத்த பணிகள் செய்வதற்காக ஆலயத்திற்கு வந்தார். கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்க முயன்ற நிலையில், 3 ஆம்ப்ளிபயர்கள் திருடு போயிருப்பதை அறிந்து சேகரகுரு ஆல்வின் ரஞ்சித்குமார், சேகர கமிட்டி உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொறுப்பு முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராய்ஸ்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடியிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இதுகுறித்து கோயில் பணியாளர் ஜோதிராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை பிடிக்கும் முயற்சியில் நாசரேத் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கிறிஸ்தவ ஆலயத்தில் ரூ.1லட்சம் மதிப்புள்ள ஆம்ப்ளிபயர்கள் திருடப்பட்ட சம்பவம் நாசரேத் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pillaiyanman ,Church ,Nazareth , Bargains at Pillaiyanman Church near Nazareth and robs Rs 1 lakh amplifier: Mysterious gang's hand
× RELATED குடும்பத்துடன் திருப்பதிக்கு...