×

தி.மலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேருக்கு மார்ச் 3 வரை நீதிமன்ற காவல்: திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவு..!

தி.மலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் 2 பேரை மார்ச் 3 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 12ம் தேதி இரவு 4 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மெஷினால் உடைத்த மர்ம கும்பல், அதிலிருந்து ரூ.72 லட்சத்து 29 ஆயிரத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரே நாள் இரவில், அடுத்தடுத்து 4 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையடித்ததும், அதிவேகமாக செயல்பட்டு மாநிலம் கடந்து, மாநிலம் தப்பியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில், திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் ஹரியானா மாநிலத்திற்கும், திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன் கர்நாடகா மாநிலத்திற்கும், வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன் குஜராத் மாநிலத்திற்கும், திருவள்ளூர் எஸ்பி செபாஸ் கல்யாண் ஆந்திரமாநிலத்திற்கும் தங்களது தனிப்படைகளுடன் குற்றவாளிகளை பிடிக்க விரைந்தனர். ராணிப்பேட்டை எஸ்பி கிரண் ஸ்ருதி தடய அறிவியல் சம்மந்தப்பட்ட புலன் விசாரணையை மேற்கொண்டு வந்தார்.

மொத்தம் 5 எஸ்பிக்கள் கொண்ட 9 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்புத்துலக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், இந்த கொள்ளை தொடர்பாக கோலாரில் 2 பேரும், குஜராத்தில் 6 பேரும், ஹரியானாவில் 2 பேரும் என மொத்தம் 10 பேரை தனிப்படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். அதில், மூளையாக செயல்பட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரீப்(35) என்பவனையும், அவனது கூட்டாளியான ஆசாஜ்(37) என்பவனையும் துப்பாக்கி முனையில் ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில், அந்த மாநில போலீஸ் துணையுடன் தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கொள்ளை கும்பலின் தலைவனான முகமது ஆரீப், ஏற்கனவே ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதால், அது தொடர்பான 4 மாநில போலீசாரும், நேற்று ஹரியானா விரைந்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணையின் பெரும்பகுதி நிறைவடைந்த நிலையில், இன்று பலத்த பாதுகாப்புடன் திருவண்ணாமலைக்கு அழைத்து வர அனைத்து வரப்பட்டான். கொள்ளையர்கள் முகமது ஆரிஃப், ஆசாத் ஆகியோரை திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அரியானாவில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் முகமது ஆரிஃப், கூட்டாளி ஆசாத்துக்கு மார்ச் 3 வரை காவல் விதிக்கப்பட்டுள்ளது. இருவரையும் 15 நாள் சிறையில் அடைக்க திருவண்ணாமலை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கவியரசன் உத்தரவிட்டார்.


Tags : Thiruvannamalai ,ATM , 2 Thiruvannamalai ATM robbers remanded in judicial custody till March 3: Thiruvannamalai court orders..!
× RELATED கலெக்டர் அலுவலகம் முன் முதியவர்...