அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல பிரதேசம்: சீனாவின் ஆக்கிரமிப்புக்கு கடும் கண்டனம்

வாஷிங்டன்: அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், சீனாவின் ராணுவ ஆக்கிரமிப்புக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்துக்குள் சீனா அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஆளும் ஜனநாயகக் கட்சியின் செனடர் ஜெப் மெர்க்லி மற்றும் குடியரசு கட்சியின் பில் ஹக்கர்டி ஆகியோர் இணைந்து கொண்டு வந்தனர். இந்திய ஆதரவு செனடர் ஜான் கார்னின் தீர்மானத்தை வழிமொழிந்துள்ளார்.

தீர்மானத்தில், ‘அருணாச்சல பிரதேசம் சர்ச்சைக்குரிய பிரதேசமாக இல்லாமல், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இதற்கு சீனா சொந்தம் கொண்டாட முடியாது. ஒத்த எண்ணம் கொண்ட இந்தியாவுடன் இணைந்த அப்பகுதிக்கு ஆதரவையும் உதவியையும் வழங்குவோம் என அமெரிக்கா உறுதி அளிக்கிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அருணாச்சல பிரதேசத்தின் பகுதிகளுக்கு சீனாவின் மாண்டரின் மொழி பெயர்கள் குறிப்பிட்டு வரைபடங்களை வெளியிடுதல், அசல் கட்டுப்பாட்டு கோட்டில் நிலைமையை மாற்ற சீனா தனது ராணுவத்தை பயன்படுத்துவதை அமெரிக்க செனட் சபை கண்டித்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியா தன்னை தற்காத்து கொள்ளும் நடவடிக்கைக்கும் தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: