×

ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா: தேர்தல் கமிஷன் அங்கீகாரம்

மும்பை: ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா என்றும், அந்த அணிக்கே வில் அம்பு சின்னம் உரிமையுடையது எனவும் தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனாவும் பாரதிய ஜனதாவும் கூட்டணியாக போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்னர் முதல்வர் பதவி யாருக்கு என்ற மோதலில், அந்தப்பதவியை பாஜ விட்டுத்தர முன்வராததால் கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. இதைத்தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தார். உத்தவ் தாக்கரே முதல்வரானார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் மகாராஷ்டிர சட்ட மேலவைத் தேர்தல் முடிந்த கையோடு, உத்தவ் அரசில் அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, ஆதரவு எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்றார். இதனால் பெரும்பான்மை இழந்து உத்தவ் அரசு கவிழ்ந்தது. இதன் பின்னர் ஏக்நாத் ஷிண்டே பாரதிய ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். ஷிண்டே முதல் அமைச்சராகவும், பாரதிய ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்நவிஸ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். இதனிடையே சுமார் 40 சிவசேனா எம்.எல்.ஏ.க்களும், பெரும்பான்மையான சிவசேனா எம்.பி.க்களும் ஷிண்டே அணிக்கு தாவியதால், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று அறிவிப்பதோடு, கட்சியின் வில் - அம்பு சின்னத்தைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி, ஷிண்டே அணியினர் தேர்தல் கமிஷனில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதனை எதிர்த்து உத்தவ் அணியினரும் தேர்தல் கமிஷனில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவில், ஏக்நாத் ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா. அந்த அணிக்குத்தான் வில் அம்பு சின்னம் உரியது.  உத்தவ் தாக்கரே அணி, இடைக்கால தீர்வாக வழங்கப்பட்ட உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற கட்சிப் பெயரில் தொடர்ந்து இயங்கலாம். அதேபோல இடைக்கால தீர்வாக அந்த அணிக்கு வழங்கப்பட்ட தீப்பந்தம் சின்னத்தையும் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. இந்த முடிவு, உத்தவ் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

Tags : Shinde ,Shiv Sena ,Election Commission , Shinde's team is the real Shiv Sena: Election Commission approves
× RELATED மணிப்பூர் மாநிலம் தவுபால் பகுதியில் லேசான நிலநடுக்கம்