×

மாதவரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதல்: போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு

திருவொற்றியூர்: சென்னை மாதவரத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் மோதலையடுத்து போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாதவரத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் நேற்று மாலை வழக்கம் போல் வகுப்புகள் முடிந்ததும் மாணவர், மாணவியர்கள் வீட்டுக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது இரு பிரிவு மாணவர்களிடையே மோதல் உண்டாகியது. அந்த மோதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தி, கட்டை, கல், உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொள்ள துவங்கினார்கள். இதனால் சக மாணவ மாணவியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போலானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த  மாதவரம் காவல்துறையினர் உடனடியாக அந்த கல்லூரிக்கு வந்தனர். முதலாம் ஆண்டு மாணவர்களிடம்  இது குறித்து விசாரித்தபோது, மூன்றாம் ஆண்டு மாணவர்கள் கல்லூரியின் நுழைவாயிலில் நின்று கொண்டு, முதலாம் ஆண்டு மாணவர்கள் முதல் நுழைவு வாயில் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்லக்கூடாது என்றும், அவர்கள் பின் வாசல் வழியாகத்தான் கல்லூரிக்கு உள்ளே நுழைய வேண்டும் என்றும் ஒரு விதிமுறையை பின்பற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆதரவாக வெளியில் இருந்து 15க்கும் மேற்பட்ட நபர்கள் வரவழைக்கப்பட்டு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இரு தரப்பிலும் பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கல்லூரி அருகில் பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு பிரிவிலிருந்தும் 10 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை மாதவரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து கலவர சண்டையில் ஈடுபட்ட மாணவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தற்போது தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Madhavaram , Clash of private college students in Madhavaram area: Police presence causes chaos
× RELATED படிக்க சொல்லி கண்டித்ததால் மாணவன் தூக்கிட்டு தற்கொலை