×

மாமல்லபுரம் அருகே பயங்கரம் கணவன், மனைவியை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல்

* ஏலத்தில் பங்கேற்க கூடாது என கொலையா?
* சிசிடிவி இல்லாததால் போலீசாருக்கு சிக்கல்

சென்னை: மாமல்லபுரம் அருகே கணவன், மனைவியை படுகொலை செய்த மர்ம கும்பல் 10 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.மாமல்லபுரம் அடுத்த இசிஆர் சாலையையொட்டி நெம்மேலி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட நெம்மேலி பகுதியில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு முந்திரிதோப்பு உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (வயது 85) மற்றும் அவரது மனைவி ஜானகி (80) ஆகிய இருவரும் முந்திரி தோப்பை குத்தகைக்கு எடுத்து, ஒரு குடிசைவீடு கட்டி 50 வருடமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். இவர்களது மூத்த மகன் கோபால் (60), அதே ஊரில் சற்று தொலைவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு கோபால் தனது பெற்றோரை பார்க்க வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு திறந்து இருந்தது. வீட்டுக்குள் பார்த்தபோது அவர்கள் அங்கு இல்லை. பின்னர், வீட்டின் பின்புறம் ஒரு மரத்துக்கு அடியில் போர்வையால் சுற்றப்பட்டு ஒரு உடல் இருந்ததை கண்டு கோபால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, போர்வையை எடுத்து பார்த்த போது அதற்குள் தனது தந்தை ரத்த வெள்ளத்தில் இறந்த நிலையில் இருப்பதை கண்டு கோபால் கதறி துடித்தார். ஆனால், கோபாலின் தாய் வீட்டில் இருந்து மாயமாகியிருந்தார். உறவினர் உதவியுடன் தேடியும் தாயாரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து, கோபால் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சகாதேவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக  செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காணமால் போன ஜானகியை இரவு முழுவதும் தேடி வந்தனர்.
இந்தநிலையில், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு முந்திரி தோப்புக்கு மத்தியில் ஜானகி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேலும், அவரது கழுத்தில் இருந்த தாலிச்சரடு, மூக்குத்தி, கம்மல் உள்ளிட்ட 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் அறுத்துக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது.

வீட்டில் வயதான தம்பதியர் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் இந்த கொலை, கொள்ளையில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும், கொலை நடந்த இடத்தில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மதுபானக் கடை உள்ளது. அங்கு, மது குடிக்க வந்தவர்கள் போதை தலைக்கு ஏறியதும் தம்பதியை கொலை செய்து விட்டு, நகைகளை பறித்து சென்றனரா? அல்லது அருகில் உள்ள தனியார் ஓட்டல்களில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் இதனை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.  மேலும், ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான முந்திரி தோப்பு நேற்று ஏலம் விடப்பட்டது. இந்த, ஏலத்தில் வயதான தம்பதியர் பங்கேற்கக் கூடாது என யாரேனும் அவர்களை கொலை செய்தனரா எனவும் போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

முந்திரி தோப்பை ஏலம் எடுப்பது சம்பந்தமாக சகாதேவனுக்கும் வேறு சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மர்ம நபர்களை பிடிக்க மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, இசிஆர் சாலையில் சிசிடிவி கேமரா இல்லாததால் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாருக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.


Tags : Mamallapuram , Mamallapuram, husband, wife, killing, jewelry, robbery
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...