×

மேட்டூர் பாலாறு எல்லைப்பகுதியில் கர்நாடக வனத்துறையால் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: அசம்பாவிதம் தவிர்க்க போலீஸ் குவிப்பு

மேட்டூர்: மேட்டூர் அருகே மாநில எல்ைலப்பகுதியில் கர்நாடக வனத்துறையினர், தமிழக மீனவரை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எல்லைப்பகுதி கிராமங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தப்பாடியை சேர்ந்தவர் காரவடையான் என்ற ராஜா(39). மீனவரான இவர், ஓய்வு நேரத்தில் தனது நண்பர்களுடன் வேட்டைக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (14ம்தேதி) இரவு, மேட்டூர் பாலாறு வனப்பகுதியில் ராஜா பரிசலில் வேட்டைக்கு சென்றுள்ளார்.

அவரது நண்பர்களான கோவிந்தபாடியை சேர்ந்த இளையபெருமாள், தர்மபுரி மாவட்டம் ஏமனூரை சேர்ந்த ரவி உட்பட 3பேரும் அவருடன் வேட்டைக்கு சென்றுள்ளனர். அதே நேரத்தில் வேட்டைக்கு சென்ற இடத்தில் கர்நாடக வனத்துறையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 3பேர் தப்பித்த நிலையில், ராஜா மட்டும் கர்நாடக வனத்துறையிடம் சிக்கிக் கொண்டார் என்று முதலில் தகவல் பரவியது.  இதற்கிடையில் கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மீனவர் ராஜா, பலியாகி விட்டார் என்ற தகவல் சுற்றுப்புற கிராமங்கள் அனைத்திலும் காட்டுத்தீ போல பரவியது.   இதையடுத்து மேட்டூர் போலீசாரும், கோபிநாதம்பட்டி சுற்றுப்புற கிராம மக்களும் பாலாறு பகுதியில் சடலத்தை தேட ஆரம்பித்தனர்.

3 நாட்கள் நடந்த தேடுதலுக்கு பிறகு நேற்று (17ம்தேதி) காலை, ஈரோடு வனப்பகுதிக்கு உட்பட்ட சொரிப்பாறை ஆற்றுப்பகுதியில் கவிழ்ந்த நிலையில் ராஜாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  இதுகிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராஜாவின் சடலத்தை கண்டு மனைவி பவுனா (35), மகள், 2 மகன்கள் மற்றும் ஏராளமான உறவினர்கள் திரண்டு கதறி அழுததால் அந்த பகுதி முழுவதும் சோகமயமாக காட்சி அளித்தது. அதேநேரத்தில் தகவல் அறிந்து சுற்றுப்புற கிராமங்களை ேசர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள், அங்கு திரண்டனர். அவர்கள் கர்நாடக வனத்துறைக்கு எதிராக கடுமையாக கோஷமிட்டு, அம்மாநில சோதனை சாவடி நோக்கி சென்றதால் பதற்றமான சூழல் நிலவியது.

அதே நேரத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தமிழக-கர்நாடக எல்லையான பாலாறு சோதனைச்சாவடியில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு எல்லையில், சேலம் மாவட்ட கூடுதல் எஸ்பி கென்னடி தலைமையில் டிஎஸ்பிக்கள் விஜயகுமார், ஆரோக்கியராஜ் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையில் சடலம் கிடந்த இடம் ஈரோடு மாவட்டம் பர்கூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது என்பதால் இன்ஸ்பெக்டர் (பொ) சண்முகம் விசாரணை நடத்தினார்.

சம்பவ இடத்திற்கு வந்த மேட்டூர் டிஎஸ்பி விஜயகுமார், பவானி டிஎஸ்பி, அமிர்தவர்த்தினி முன்னிலையில் போலீசார் பாலாற்றில் மிதந்த ராஜாவின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூட்டுக்கு பலியான ராஜாவின் குடும்பத்திற்கு உரியநீதி கிடைக்கும் வரை சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று, சேலம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு அமைப்புகளும் இதை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ளதால் மாவட்டம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

*குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் முதல்வர் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

சேலம், கொளத்தூர், கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தியதில் உயிரிழந்துள்ளார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த ராஜா என்ற காரவடையானின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

*புகார் அளித்துள்ள கர்நாடக வனத்துறை

இதனிடையே கர்நாடக வனத்துறையினரிடம் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம், டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர், துப்பாக்கி சூடு குறித்து  விசாரித்துள்ளனர். அதில், வனப்பகுதியில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த 4 பேரை எச்சரிக்க வானத்தை நோக்கி நாங்கள் துப்பாக்கியால் சுட்டோம். பதிலுக்கு அவர்கள், எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி விட்டனர், எனக்கூறியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக கர்நாடகாவின் மாதேஸ்வரன்மலை போலீசில் புகார் கொடுத்துள்ளோம் என்றும், ராஜா உள்பட 4 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர் என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.

*பிரேத பரிசோதனையில் உண்மை வெளியாகும்

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள மேட்டூர் பாலாறு வனப்பகுதியில் கடந்த 14ம் தேதி இரவு, 2 பரிசல்களில் ராஜா உட்பட 4 பேர் சென்றுள்ளனர். அவர்கள், கர்நாடக வனப்பகுதியில் பாலாற்றங்கரையில் இருந்தபடியே மான் வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர், அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு ராஜா தரப்பினரும் திருப்பி சுட்டுள்ளனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பியவர்கள், அவரவர் கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால்,  ராஜா மட்டும் மாயமானார். இதனால், கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் தெரிவித்தனர். 3 நாள் தேடுதலுக்கு பிறகு ராஜாவின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் துப்பாக்கி சூட்டில் ராஜா இறந்தாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


Tags : Tamil ,Nadu Fisherman Shooting ,Karnataka Forests ,Mattur Balalam Border , Mettur, Karnataka Forest Department, Tamil Nadu Fisherman, Shooting, Accident, Police Accumulation
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...