×

சிங்கார சென்னை 2.0 மற்றும் சிட்டிஸ் திட்டத்தின் கீழ் ரூ.200 கோடியில் சர்வதேச தரத்திற்கு மாறும் சென்னை மாநகராட்சி பள்ளிகள்: கல்வி தரமும் உயர்வதால் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை

சென்னை: அரசு பள்ளிகள் என்றால் ஓடுகள் வேயப்பட்ட பழைய சுவர், மரத்தடி பாடம், மிக அசுத்தமான கழிவறைகள் என்று இருந்த நிலைமை தமிழகத்தில் தற்போது இல்லை என்றே கூறலாம். மிகப்பெரிய அளவில் அரசு பள்ளிகள் மாறிவிட்டன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் வசதிகளில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை மாநகராட்சி பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் உற்சாகத்தை தந்துள்ளது.

தனியார் பள்ளிகளில் அட்மிஷனுக்காக அலையும் மக்களுக்கு சென்னை மாநகராட்சி பள்ளிகள் ஒரு வரப்பிரசாதமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியின் தரத்தை உயர்த்தும் முயற்சியிலும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரித்தல், மாணவர்களின் படிப்பு திறனை கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளிலும் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் அளவுக்குக்கு கட்டமைப்பு இருந்தபோதிலும், 80ஆயிரம் முதல் 90 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். இதன் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், முதல் கட்டமாக சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளை ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்துக்கு, பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவி அளித்து ரூ.95 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.

சென்னை ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் மண்டலத்திற்கு ஒரு பள்ளிகள் வீதம் 15 பள்ளிகள் ஸ்மார்ட் பள்ளிகளாக மாற்றம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து படிப்படியாக அனைத்து பள்ளிகளையும் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தும் நடவடிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, சென்னை மாநகராட்சி தற்போது தொடங்கியுள்ளது. தற்போது ராயபுரம்  மண்டலத்திற்கு உட்பட்ட வண்ணாரப்பேட்டை, மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி 3.83  கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

அனைத்து வகுப்பறைகளிலும் தரமான மேஜை, நாற்காலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.  பள்ளி நுழைவாயில் அழகுற, அனைவரையும் கவரும் வகையில் பிரமாண்டமாக  அமைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில்  ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்களின் சிறப்புகளை தெரிந்து  கொள்ளும் வகையிலும் வகுப்பறைகளில வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன, சென்னை மாநகராட்சியின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப் பள்ளிகள், 38 உயர்நிலை மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில் 1.12 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள்.

இந்த பள்ளிகள் ‘சிட்டிஸ்’ மற்றும் ‘சிங்காரச் சென்னை 2.0’ ஆகிய திட்டங்களின் கீழ், சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படுகின்றன. அதன் அடிப்படையில், ரூ.200 கோடி ரூபாய் செலவில் ‘சிட்டிஸ்’ என்ற திட்டத்தின் கீழ் 28 பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் உருவாக்கப்பட்ட உள்ளன, அதேபோல் பள்ளியில் உள்கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட உள்ளது. புதிய கட்டிடங்கள் கட்டுதல், இணையதள வசதியுடன் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகள் உருவாக்கப்பட உள்ளது. பள்ளி முழுதும் ‘வை-பை’ வசதி, ‘வெஸ்டன் டாய்லெட்’ வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளது.

மைதானங்கள் சமையலறையும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ‘டைனிங்’ வசதியுடன் நவீனப்படுத்தப்பட இருக்கிறது. ‘ஹைடெக்’ ஆய்வகங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களும் பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தண்டையார் பேட்டை மண்டலத்தில் 6 பள்ளிகளும், ராயபுரம் மண்டலத்தில் 2 பள்ளிகளும், திருவிக நகர் மண்டலத்தில் 3 பள்ளிகளும் சர்வதேச தரத்தில் மாற்றப்பட உள்ளன. இதேபோன்று அண்ணாநகர் மண்டலத்தில் 3 பள்ளிகளும், அடையாறு மண்டலத்தில் 3 பள்ளிகளும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 5 பள்ளிகளும் கோடம்பாக்கம் மண்டலத்தில் 5 பள்ளிகளும், திருவிநகர் நகர் மண்டலத்தில் 2 பள்ளிகளும் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்பட உள்ளன.

இத் மூலம் சர்வதேச தரத்திற்கு சென்னை மாநகராட்சி பள்ளிகளை மாற்றும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதனால் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பள்ளி நுழைவாயில் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்படும். வகுப்பறைகள் சுவர்களும் ஓவியங்கள் தீட்டப்பட்டு, மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில் மாற்றப்படுகின்றன. இலவச கல்வி, சர்வதேச தரத்திற்கு மாறுவதால், பெற்றோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் தற்போது தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன. அங்கு மாணவர் சேர்க்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த பள்ளிகளை டெல்லி சென்ற போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு வந்தார். அதே போன்று அரசு பள்ளிகள் தமிழகத்திலும் தரம் உயர்த்தப்படும் என்று கூறினார். அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி பள்களின் தரம் சர்வதேச தரத்துக்கு மாற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* 27,311 மாணவர்கள்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2021-22ம் கல்வியாண்டில் மட்டும் 27,311 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். இதில் 19,000க்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து வந்தவர்கள். மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவதால், வரும் காலங்களில் மாநகராட்சிப் பள்ளிகளில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும், என அதிகாரி தெரிவித்தார்.

* பெற்றோருக்கு விழிப்புணர்வு
சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சி பள்ளிகளை சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தி வருகிறோம். சர்வதேச விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில், புகழ்பெற்ற பயிற்சி மையங்களில் பயிற்சி அளிக்க உள்ளோம். மாநகராட்சி பள்ளிகளிலும் தரமான கல்வியை கொடுக்க முடியும் என மக்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே, மாநகராட்சி பள்ளிகளின் மாணவர் சேர்க்கையும் ஒவ்வொறு ஆண்டும் அதிகரித்து வருகிறது. தரம் உயர்த்தப்பட்ட சென்னை மாநகராட்சி பள்ளிகள் குறித்து பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்,’’ என்றார்.

* ஒரு லட்சத்தை தாண்டியது
சென்னை மாநகராட்சி பள்ளிகளின் மாணவர் சேர்க்கையானது 2019-20ம் கல்வியாண்டில் 83,098 என்றிருந்தது. 2020-21 கல்வியாண்டில் 90,394 எனவும், 2021-22 கல்வியாண்டில் 1,02,605 ஆகவும் உயர்ந்துள்ளது. இடைநின்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களைப் பள்ளியில் சேர்க்கும் பணியிலும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், அவர்கள் வீடு வீடாகச் சென்று மாநகராட்சிப் பள்ளியின் வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் தற்போது தான் மாணவர்களின் சேர்க்கை ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai Corporation ,Singara Chennai 2.0 ,CITIS , Chennai Corporation schools to be upgraded to international standards at a cost of Rs 200 crore under Singara Chennai 2.0 and CITIS: Enrollment to increase as education standard rises
× RELATED தமிழகத்தில் 188 இடங்களில் தண்ணீர்...