×

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக நிலுவையில் இருந்த 32 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு ரூ.1.43 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்த 32 ஆயிரம் வழக்குகள் கடந்த ஒரு மாத்தில் தீர்வு காணப்பட்டு, ரூ.1.43 கோடி அபராதமாக போக்குவரத்து போலீசார் வசூலித்துள்ளனர்.
சென்னையில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை மீறி வாகனம் ஓட்டும் நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள்மீது தினசரி சராசரியாக 6 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகள், அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதாக கூறிவிட்டு, போலீசாரிடம் இருந்து ரசீதை பெற்றுச் செல்கின்றனர். ஆனால், அதன்படி பலர் தங்களது அபராத தொகையை கட்டாமல் நிலுவையில் வைத்துள்ளனர். எனவே, நிலுவையில் உள்ள அபராத தொகைகளை வசூலிக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகலுக்கு அழைப்பு செய்து போக்குவரத்து போலீசார் வழக்குகள் முடித்துவைத்து அபராதம் வசூலித்து வருகின்றனர்.

அந்த வகையில், நிலுவையில் உள்ள போக்குவரத்து வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் மாநகரம் முழுவதும் 158 இடங்களில் போக்குவரத்து போலீசார் சிறப்பு முகாம் நடத்தினர். அதில், போக்குவரத்து விதிகளை மீறி அபராதம் செலுத்தாமல் நிலுவையில் இருந்து 17,418 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.52,56,800 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல், மாநகரம் கடந்த இரண்டு வாரங்களில் நடந்த சிறப்பு தணிக்கை முகாம் மூலம் 14,859 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதமாக ரூ.90,52,690 வசூலிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் நிலுவையில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் 32,227 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதமாக 1 கோடியே 43 லட்சத்து 9 ஆயிரத்து 490 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த சிறப்பு முகாம் இனி வரும் நாட்களிலும் தொடரும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Settlement of 32,000 pending traffic violation cases Rs 1.43 crore fine collected: Traffic police action
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...