×

கதிரவன் ஐஏஎஸ் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் கதிரவன் ஐஏஎஸ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் சேத்தமங்கலத்தை சேர்ந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சி.கதிரவன். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். முதுகலை வேளாண்மை பட்டதாரியான இவர் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002ம் ஆண்டு பயிற்சி துணை ஆட்சியராக தர்மபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றினார். 2007ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அதன்படி விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றினார். சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் பணியாற்றி உள்ளார்.

2013ம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து பெற்று வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராக பணியாற்றினார். அதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியராக பதவி ஏற்றார். பின்னர் ஈரோடு மாவட்டத்தின் 33வது ஆட்சியராக கடந்த 2018ம் ஆண்டு பொறுப்பேற்றார். பின்னர் சேலம் தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் நிர்வாக இயக்குநராக இருந்த கதிரவனுக்கு விருப்ப மாறுதல் அடிப்படையில்  நெடுஞ்சாலைத்துறையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

இவர், சென்னை விருகம்பாக்கம் ஐஏஎஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரின் உறவினர்கள் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்த
வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மறைந்த ஐஏஎஸ் அதிகாரி கதிரவன் உடலுக்கு அரசு உயர் அதிகாரிகள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர். இதனிடையே கதிரவன் ஐஏஎஸ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் கதிரவன், ஐ.ஏ.எஸ் உடல் நலக்குறைவின் காரணமாக மறைவெய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Kathiravan ,IAS ,CM ,M.K.Stal , Kathiravan IAS passes away: CM M.K.Stal's condolence
× RELATED இந்த தேர்தல் மூலம் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்