கன்னியாகுமரியில் ரூ.7 கோடியில் புதிய படகுத்தளம்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் 3 படகுகள் மூலம் படகு போக்குவரத்து நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது சுற்றுலாத்துறை மூலம் ரூ. 8 கோடி செலவில் வாங்கப்பட்ட தாமிரபரணி மற்றும் திருவள்ளுவர் ஆகிய 2 அதிநவீன சொகுசு படகுகளும் இந்த படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த 2 புதிய படகுகளும் வடிவமைப்பில் பெரிதாக இருப்பதால் இடநெருக்கடி காரணமாக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் படகுதளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இடநெருக்கடியை சமாளிக்க படகுத்துறையின் தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் ரூ. 7 கோடி செலவில் கூடுதலாக ஒரு புதிய படகுதளம் அமைக்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக புதிய படகுதளம் கட்டுவதற்கு தேவையான சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணிகள் கன்னியாகுமரியில் தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: