×

நெம்மேலி ஊராட்சியில் விரிசலுடன் இடியும் நிலையில் அங்கன்வாடி மையம்: பெற்றோர் அச்சம்

செங்கல்பட்டு: நெம்மேலி ஊராட்சியில் கடந்த 2012ம் ஆண்டு கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம், தற்போது முறையான பராமரிப்பின்றி கட்டிட விரிசல்களுடன் எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. இதனால் அங்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட துஞ்சம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி குழந்தைகளின் ஆரம்ப கல்விக்காக, கடந்த 2012ம் ஆண்டு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு உள்ளது.

இங்கு 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தின் சுற்றுச்சுவர்கள், மேற்கூரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான கட்டிட விரிசல்களுடன் வலுவிழந்து, எந்நேரத்திலும் இடிந்து விழும் அவலநிலையில் காணப்படுகின்றன. மேலும், அங்கன்வாடி மையக் கட்டிடத்தை சுற்றிலும் ஏராளமான முட்புதர் காடுகள் வளர்ந்துள்ளன. இதனால் கட்டிடத்துக்குள் பல்வேறு விஷப்பூச்சிகள் உலவி வருவதால், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளை படிக்க அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர்.

இதனால் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இங்கு படிக்கும் குழந்தைகள், தற்போது அருகிலுள்ள தர்மாபுரம் அங்கன்வாடி மையத்தில் படித்து வருகின்றனர். எனவே, இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு, அங்கு புதிதாக நவீன வசதிகளுடன் கூடிய ஒரு அங்கன்வாடி மையக் கட்டிடத்தை கட்டி தர மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : Anganwadi ,Nemmeli , Anganwadi center in Nemmeli panchayat is crumbling with cracks: parents fear
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்