உடல் உறுப்பு தானம், பெறுதல் விதிமுறையில் திருத்தங்கள் 65 வயது வரம்பு நீக்கம்; பதிவு கட்டணம் ரத்து; ஒரே தளத்தில் பதிவு: ஒன்றிய சுகாதார அமைச்சகம் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: உடல் உறுப்பு தானம் செய்தல் மற்றும் பெறுதல் விதிமுறைகளில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் மூன்று முக்கியமான திருத்தங்களை கொண்டு வந்துள்ளதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிட முடியும் என்று கூறப்படுகிறது. உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும். உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை) தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு, தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில் தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும். பின்னர், அந்தந்த மாநில அரசின் இணையதளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள் கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவு அடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும். இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம்செய்ய குடும்பத்தினர் முன்வந்தால், முன்னுரிமை வரிசை அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள் பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும். இதில், மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை, ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம் கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.

இந்தியாவில் உடல் உறுப்புகளை தானமாக பெற 5 லட்சம் பேர் பதிவுசெய்து காத்திருக்கின்றனர். உறுப்பு தானம் தேவைப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் தேவையான உறுப்பு கிடைக்காமலேயே உயிரிழக்கின்றனர். தற்போதுள்ள சட்ட நடைமுறைகளால் உறுப்பு தானம் பெறுவதில் சிரமங்கள் அதிகமாக உள்ளன. அதனை எளிதாக்கும் வகையில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டல் நெறிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விதிமுறைகளில் மூன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி உறுப்பு தேவைப்படுவோருக்கான 65 வயது வரம்பு நீக்கப்பட்டது. தற்போதைய விதிகளின்படி, உறுப்புகளை பெறுபவர்கள் அவர்கள் வசிக்கும்  மாநிலத்தில் மட்டுமே உறுப்புகளின் தேவை குறித்து பதிவு செய்ய வேண்டும். இனிமேல் அனைத்து இந்தியர்களும், ஒரே தளத்தில் உறுப்பு கோரி பதிவு செய்ய அனுமதிக்கப்படும். உறுப்புக்காக மாநிலங்களால் வசூலிக்கப்படும் பதிவுக் கட்டண முறை நீக்கப்படுகிறது. மேற்கண்ட விதிமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிய முறையில் உறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. எந்தவொரு நபரும், வயது வித்தியாசமின்றி உறுப்புகளை தானமாக கொடுக்கவும் முடியும், பெறவும் முடியும். மேலும் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் உறுப்புகளை கொண்டு செல்ல ட்ரோன்களைப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றன.

Related Stories: