×

கடைசி 2 டெஸ்ட்டுக்கான வீரர்கள் தேர்வு: தேர்வுகுழு கூட்டத்தில் பங்கேற்க சேத்தன் சர்மாவுக்கு தடை

மும்பை:இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு குழுவின் தலைவராக இருப்பவர் முன்னாள் வீரர் சேத்தன் சர்மா. இவர் அண்மையில் தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேஷனில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளது. கோஹ்லி -ரோகித்சர்மா இடையே ஈகோ இருந்தது, கங்குலிக்கு எப்போதும் கோஹ்லியை பிடிக்காது. வீரர்கள் உடற்தகுதிக்காக மோசடியில் ஈடுபடுகின்றனர் என தெரிவித்திருந்தார். இதனால் அவர் மீது கேப்டன் ரோகித்சர்மா, ஹர்திக்பாண்டியா உள்ளிட்ட மூத்த வீரர்கள் கோபம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு ரஞ்சி கோப்பை பைனல் முடிந்த பின்னர் நடைபெற உள்ளது.

இதில் சேத்தன் சர்மா பங்கேற்க அனுமதி அளிக்கப்படாது என தகவல் வெளியாகி இருக்கிறது. இடைக்கால தலைவராக சிவசுந்தர் தாஸ் இருப்பார் எனவும், அவரின் தலைமையில் தேர்வு குழு கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. இதுபற்றி பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், இது நிச்சயமாக ஒரு சங்கடமான சூழ்நிலை. வெளிப்படையாக, தேர்வுக் குழுவின் தலைவரிடமிருந்து விரும்பத்தகாத விஷயங்கள் பொதுவில் வரும்போது வீரர்கள் மகிழ்ச்சியடைய மாட்டார்கள். ரஞ்சி இறுதிப்போட்டி முடிந்த உடனேயே தேர்வுக் கூட்டம் நடைபெறுவது எங்களுக்குத் தெரியும். இருப்பினும் இறுதி முடிவை எடுப்பது செயலாளர் ஜெய்ஷாவின் கையில் உள்ளது. ஆனால் ஒரு நபர் காரணமாக வீரர்களின் அதிருப்தியை நாங்கள் அனுமதிக்க முடியாது என்பதால் சேத்தன் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை,” என்றார்.


Tags : Chetan Sharma , Selection of players for last 2 Tests: Chetan Sharma barred from selection committee meeting
× RELATED இலங்கைக்கு எதிரான டி.20, ஒருநாள் தொடர்;...