×

59 மணி நேரமாக டெல்லி, மும்பை பிபிசி ஆபீசில் நடந்த 3 நாள் ரெய்டு நிறைவு: முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றது ஐடி

புதுடெல்லி: டெல்லி, மும்பையில் செயல்படும் பிபிசி அலுவலங்களில் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த சோதனை முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரங்களில் பிரதமர் மோடியின்  பங்கு  தொடர்பான ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு  செயல்படும் பிபிசி நிறுவனம் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்ப ஒன்றிய  அரசு தடைவிதித்தது. மேற்கண்ட ஆவணப்பட விவகாரம் தொடர்பாக ஆளும்  பாஜகவுக்கும், எதிர்கட்சிகளுக்கும் மோதல்கள் ஏற்பட்டன. இந்த நிலையில் கடந்த  செவ்வாய்க் கிழமையன்று காலை 11 மணியளவில் வருமான வரித் துறையைச் சேர்ந்த  அதிகாரிகள் குழு, டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி செய்தி நிறுவன  அலுவலகத்தில் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.

அப்போது பிபிசி-யில்  பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊழியர்களின் நிதித் தரவுகளின்  அடிப்படையிலும், சர்வதேச பணப்பரிமாற்றம், வருமான வரிஏய்ப்பு உள்ளிட்ட  காரணங்களின் அடிப்டையிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. செய்தி நிறுவனத்தில்  நடத்தப்பட்ட சோதனைக்கு, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா மற்றும் பிரஸ்  கிளப் ஆஃப் இந்தியா (பிசிஐ) உள்ளிட்ட பல்வேறு ஊடக அமைப்புகளும்,  எதிர்கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. கடந்த மூன்று நாட்களாக நடந்த வருமான வரித்துறையின் சோதனை இன்று நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித் துறையின் சோதனைகள் இன்றுடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 59 மணி நேர சோதனைகள் நடந்தன. மூன்று நாட்களில் நடந்த இந்த ஆய்வின் போது, பல்வேறு ஆவணங்கள் மற்றும் தரவுகளை வருமான வரித்துறை சேகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேல் நடவடிக்கை இருக்கும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே பிபிசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘வரி செலுத்துபவர்கள் தற்போது அலுவலகங்களில் பணியாற்றவில்லை. சோதனைக்கு பிறகு தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.

Tags : BBC ,Delhi, Mumbai , 59-hour 3-day raid on BBC offices in Delhi, Mumbai ends: ID takes away important documents
× RELATED சென்னையில் கடந்த 3 நாட்களாக டெல்லி, மும்பை விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி