×

ஸ்பிக் டிஏபி உரத்துடன் அதே நிறுவனத்தின் கீர்த்தி பிராண்ட் உரத்தையும் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார்..!!

டெல்லி: ஸ்பிக் டிஏபி உரத்துடன் அதே நிறுவனத்தின் கீர்த்தி பிராண்ட் உரத்தையும் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கொண்ட ஒரு சாக்கு ஸ்பிக் டிஏபி உரத்தின் விலை ரூ.1,300; கீர்த்தி உரத்தையும் சேர்த்து வாங்கும்போது ரூ.2,250 ஆகிறது. கீர்த்தி உரத்தை வாங்கினால்தான் டிஏபி உரம் தரப்படும் என உர வியாபாரிகள் கட்டாயப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். டிஏபி உரத்துடன் கீர்த்தி என்ற பெயரில் விற்கப்படும் கால்சியம், மெக்னீசியம் கந்தக உரத்தை இட்டால் மகசூல் பாதிக்கப்படுகிறது. டிஏபி உரத்துடன் மானியம் தரப்படுவதால் ஒரு ஆதார் கார்டு வைத்திருப்பவருக்கு 2 மூட்டைகள் மட்டுமே தருவதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

ஸ்பிக் தயாரிக்கும் உரங்களை விவசாயிகள் கட்டாயமாக வாங்க நிர்பந்திப்பதாக சிவகங்கை, திண்டுக்கல், தென்காசி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் உர வகைகளைவிட கூடுதல் விலைக்கு ஸ்பிக் உரங்கள் விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மற்ற நிறுவனங்கள் 10 கிலோ எடையுள்ள ஜிங்க் உரத்தை ரூ.550க்கு விற்கும்போது ஸ்பிக் அதே உரத்தை ரூ.650க்கு விற்பதாகவும்,  மற்ற நிறுவனங்கள் ரூ.250க்கு விற்கும் கடல்பாசி குருணையை ஸ்பிக் நிறுவனம் ரூ.350க்கு விற்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கால்சியம், மெக்னீசியம், சல்பேட் உரத்தை மற்ற நிறுவனங்கள் ரூ.550க்கு விற்கும்போது ஸ்பிக் நிறுவனம் ரூ.650க்கு விற்கப்படுகிறது. விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் யூரியா உரம் மூட்டை ஒன்று ரூ.268க்கு விற்கப்படுகிறது. ரூ.268க்கு யூரியா உரம் தேவையென்றால் அதேபோல் இருமடங்கு விலை உள்ள மற்ற இடுபொருட்களை வாங்க நிர்பந்திப்பதாகவும் கூறப்படுகிறது. இரு மடங்கு விலை கொடுத்து வாங்க முடியாமல் ஏழை விவசாயிகள் தத்தளிப்பதாக தென்காசி உர வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் உர விற்பனையில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யூரியா, டிஏபி உரங்களுடன் தேவையில்லாதவற்றை வாங்க கட்டாயப்படுத்துவதால் சாகுபடி செலவு அதிகரிப்பதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர். தேவையற்ற பொருட்கள் தங்கள் தலையில் சுமத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags : Keerthi ,Spike DAP , Spike DAP Fertilizer, Keerthi Brand, Farmers Complain
× RELATED அனிமேஷன் வீடியோவுக்கு டப்பிங் பேசிய பிரபாஸ்