சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் நேற்று (16.02.2023) மழைநீர் வடிகால்களில் 539,54 கி.மீ நீளத்திற்கு கொசுப்புழுக்கள் மருந்து தெளித்தும், 543.11 கி.மீ நீளத்திற்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், 4,772 தெருக்களில் கொசு ஒழிப்புப் புகைபரப்பியும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில், கொசு ஒழிப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசு ஒழிப்பு நடவடிக்கையாக, நேற்று (15.02.2023) வியாழக்கிழமை ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 539.54 கி.மீ. நீளத்திற்கு கொசுப்புழுக்கள் ஒழிப்பு மருந்து தெளித்தும், 543.11 கி.மீ நீளத்திற்கு கொசுக்கொல்லி புகைபரப்பியும், நீர்நிலைகளில் 12727 கி.மீ. நீளத்திற்கு ட்ரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுப்புழுக்கள் ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 4,772 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகைபரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 98 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது. இந்தத் தீவிர கொசு ஒழிப்பு பணிகளுக்காக, பெருநகர சென்னை மாநகராட்சியில் கையினால் இயக்கும் 229 புகைபரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைபரப்பும் இயந்திரங்கள், கையினால் இயக்கப்படும் 412 கொசுக் கொல்லி மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைபரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நீர்வழித்தடங்களில் 6 ட்ரோன்கள் மற்றும் 10 படகுகள் மூலமாகவும் கொசுப்புழுக்கள் ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்தப் பணிகளுக்காக 4 ரோபோடிக் இயந்திரங்கள், 3 சிறிய மற்றும் 2 பெரிய ஆம்பிபியன் ஆகிய நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு, நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகள் முறையாக அகற்றப்பட்டு, கொசுப்புழுக்கள் ஒழிப்பு மருந்து தெளிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.