சின்னாளபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் பேரிகார்டுகளை அகற்ற வேண்டும்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை

சின்னாளபட்டி: மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளபட்டி புறவழிச்சாலையில் அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பேரிகார்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. இவற்ைற அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு வரும் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாளபட்டி பிரிவு அருகே (பைபாஸ்) தேசிய நான்கு வழிச்சாலை நிர்வாகம் சார்பாக சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல்லில் இருந்து சின்னாளபட்டிக்கு வரும் பொதுமக்களும், மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் பொதுமக்களும் நான்கு வழிச்சாலையில் சர்வீஸ் சாலையுடன் அமைக்கப்பட்ட குறுக்குப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.

அம்பாத்துரை காவல்துறை அதிகாரிகள் அதிக விபத்து நடப்பதாக கூறி குறுக்குப்பாதையை அடைத்து விட்டனர். இதனால் சின்னாளபட்டியில் இருந்து காந்திகிராமம் செல்பவர்கள் 5 கி.மீட்டர் தூரம் கூடுதலாக பயணித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இதே நிலை நீடித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். கடந்த வருடம் ஏப்ரல் 19ம் தேதி சின்னாளபட்டிக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமியிடம் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் புறவழிச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உடனடியாக சின்னாளபட்டி புறவழிச்சாலை பகுதிக்கு வந்த எம்.பி வேலுச்சாமி அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டபின்பு திண்டுக்கல்லின் அப்போதைய எஸ்.பி சீனிவாசன் அழைத்து பேசினார். மேலும் பேரிகார்டு வைக்கப்பட்டுள்ள இடங்களை அவர்கள் இருவரும் ஆய்வு செய்தனர்.

பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை அழைத்து பேசிய எம்.பி வேலுச்சாமி இப்பகுதியில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சர்வீஸ் சாலை அமைத்துக் கொடுப்பதோடு, எம்.பி. நிதியில் உயர்மின் கோபுர விளக்கும், சிக்னல்களும் பொருத்தி தருகிறேன் என்று உறுதியளித்தார்.

இந்நிலையில் சர்வீஸ் சாலைகளுக்கான பணிகள் கடந்த 10 மாதங்களாக தொடங்கப்படவில்லை. மேலும் அப்பகுதியில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு வேலிகளும் அப்புறப்படுத்தவில்லை. இதனால் திண்டுக்கல்லிருந்து சின்னாளபட்டி வரும் பொதுமக்களும், செட்டியபட்டி மற்றும் வெள்ளோடு, காந்திகிராம பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சின்னாளபட்டி பிரிவு பகுதியில் உள்ள சாலையின் தடுப்புச்சுவரை தாண்டிக்கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது.

இதனால் பலமுறை டூவீலர்களில் வந்தவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இதுகுறித்து காந்திகிராமத்தை சேர்ந்த துரைப்பாண்டி கூறுகையில், திண்டுக்கல்லில் இருந்து கொடைரோடு வரை பிள்ளையார்நத்தம், வெள்ளோடு பிரிவு, பஞ்சம்பட்டி பிரிவு, கலிக்கம்பட்டி பிரிவு, சின்னாளபட்டி பிரிவு, பெல்லா பிரிமியர் மில், பெருமாள் கோவில்பட்டி, காமலாபுரம் ஆகிய பகுதிகளில் சர்வீஸ் சாலையுடன் சாலையை கடக்க குறுக்கு பாதை அமைத்துள்ளனர். ஆனால் சின்னாளபட்டி பிரிவு பகுதியில் மட்டும் குறுக்குச்சாலையை அடைத்துள்ளனர்.

இப்பகுதி மக்கள் கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இந்த பகுதிகளை பார்த்துவிட்டுச் சென்றார். அதன்பின்னரும் சாலையின் குறுக்கே வைத்துள்ள இரும்பு தடுப்புகளை அகற்றவில்லை. இதனால் ஒவ்வொரு முறையும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர். 5 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. என்றார். இதுகுறித்து திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமியிடம் கேட்டபோது, ஹைமாஸ் விளக்குகள் பொருத்துவதற்கு தமிழக அரசு அனுமதி கிடைக்கவில்லை. அதனால் அப்பகுதியில் சோலார் மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சின்னாளபட்டி பேரூராட்சி நிர்வாகமும், செட்டியபட்டி ஊராட்சி நிர்வாகமும் தங்கள் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். அதன் பின்னர் சோலார் விளக்குகள் பொருத்தப்படும். இதையடுத்து அடைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் அகற்றப்படும். இதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது என்றார்.

Related Stories: