×

பொள்ளாச்சியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு இளநீர் அதிகளவில் அனுப்பி வைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு, வெயிலின் தாக்கத்தால் இளநீர் அனுப்பி வைக்கப்படுவது அதிகமாக உள்ளது. பொள்ளாச்சியில் தென்னை விவசாயம் அதிகபடியாக உள்ளது. இங்குள்ள தென்னைகளில் உற்பத்தியாகும் பச்சைநிற இளநீர் மற்றும் செவ்விளநீருக்கு, இன்னும் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் வரும்போது, பொள்ளாச்சியிலிருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அதிகளவில் இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இளநீர் விற்பனை சூடுபிடிக்கும்.

கோடை துவங்குவதற்கு முன்பாகவே, தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களில் இருந்து பச்சை இளநீர், செவ்விளநீர் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அதிலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து இளநீரை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்வது அதிகமாக உள்ளது. மேலும், சென்னை, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்யப்பட்டு அதிகளவு இளநீர் அனுப்பப்படுகிறது.

தென்னை விவசாயிகள்  கூறுகையில், ‘பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஆண்டில் அடுத்தடுத்து பெய்த பருவமழையால், தென்னையில் இளநீர் உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், இளநீர் பறிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதனை வெளி மாவட்டம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகள் நேரில் வந்து, இளநீரை வாங்கி செல்வது தற்போது அதிகரித்துள்ளது. இதில் செவ்விளநீரே அதிகளவு வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கோடை நெருங்கும்போது, வெளியூர்களுக்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம், விற்பனைக்காக செவ்விளநீர் மற்றும் பச்சை இளநீர் அனுப்பி வைக்கும் பணி இன்னும் அதிகமாக இருக்கும்’ என்றனர்.

Tags : Pollachi , Sending more water from Pollachi to other states
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!