உரிய நேரத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம்: பெரியகுளத்தில் நெல் சாகுபடி பணிகள் ‘படுஜோரு’

* தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவிப்பு

* கிலோவுக்கு ரூ.3 விலை உயர்த்தவும் கோரிக்கை

பெரியகுளம்: தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள பெரியகுளம், போடி, கம்பம், வருசநாடு போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.

விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதி தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் பதவியேற்ற காலகட்டம் தமிழகம் பெரும் தள்ளாட்டத்தில் இருந்தது. கொரோனா பெருந்தொற்று, பருவமழை பாதிப்புகள், நிதிச்சுமை என நெருக்கடிகள் அடுத்தடுத்து வந்தன. அவற்றே செம்மையாக ஒருபக்கம் கையாண்டு கொண்டே, மறுபுறம் மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தினார். அதுவும் முதல் நாளில் இருந்தே களப்பணியை தொடங்கி விட்டார். அவற்றில் வேளாண்துறை மேம்பாட்டிற்காக செய்த விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன. இதில் பல்வேறு திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது. தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு சார்பில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக விவசாயிகளின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிய நெல் கொள்முதல் நிலையம், புதிய தடுப்பணை, நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் தற்போது ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். தேனி மாவட்டத்தில் அதிகளவில் நெல் விவசாயம் நடக்கிறது. பெரியகுளத்தை சுற்றி உள்ள பகுதியில் 5000க்கும் மேற்பட்ட ஏக்கரில் கோவை 43 மற்றும் 45, ஆடுதுறை 39, 45, என்.எல்.ஆர், ஐ.ஆர் 20, நெல்லூர் 449, உள்ளிட்ட சன்னி ரக நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு இருந்தனர்.

கடந்த ஆண்டு பெய்யாத தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்ததால் பெரியகுளம், பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிறைந்த நிலையில், குளத்தின் மூலம் பாசன வசதி பெறும் 2000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நடவு செய்யப்பட்ட முதல் போக நெல் சாகுபடி நல்ல விளைச்சல் அடைந்ததால் விவசாயிகள் அறுவடை பணிகளில் தீவரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் போக சாகுபடியின் போது தொடர்ந்து மழை பெய்து மகசூல் பாதித்த நிலையில் இந்த ஆண்டு பருவமழை உரிய நேரத்தில் பெய்து மழை நின்றதால் இந்த ஆண்டு முதல் போக சாகுபடியில் ஏக்கருக்கு 35 முதல் 40 மூட்டை அறுவடையாகி நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் அறுவடை துவங்கிய 3 நாட்களில் தமிழக அரசு சார்பில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகளுக்கு எந்த சிரமமும் இல்லாமல் அறுவடையாகும் நெல்லை உடனுக்குடன் கொள்முதல் செய்து வருகின்றனர். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இடுபொருள் விலை உயர்வு, நடவு பணி செய்யும் கூலி உயர்வு, உரம் விலை உயர்வு உள்ளிட்டவைகள் பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்குவதால் தொடர்ந்து விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையில், ஆண்டுதோறும் ஒரு கிலோ நெல்லிற்கு ரூ.3 விலை உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புட்செல் எஸ்பி ஆய்வு

பெரியகுளம் பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மண்டல கண்காணிப்பாளர் சினேகபிரியா தலைமையில்ான போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் சட்ட விதிமுறையை பின்பற்றி பெறப்படுகிறதா, அல்லது முறைகேடு ஏதும்  நடைபெறுகிறதா, எனவும் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய பணம் கேட்கப்படுகிறதா, உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா என விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும், விவசாயிகளிடம் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்லிற்கு பணம் எதுவும் கேட்டால் புகார் அளிக்கவும் என அறிவுறுத்தினார்.

Related Stories: