தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரம்-மண்டபம் ரயில் சேவை நிறுத்தம்: ரயில் பயணத்தை இழந்த நூறு கிராம மக்கள்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதால், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் பயணத்தை இழந்துள்ளனர்.

கடந்த 1914 பிப்.24ல் தனுஷ்கோடியில் இருந்து மீட்டர்கேஜ் பாதையில் இதரப் பகுதிகளுக்கு நீராவி இன்ஜின் ரயில் போக்குவரத்து தொடங்கியது. தனுஷ்கோடி-சென்னை இடையே இயங்கிய போர்ட் மெயில் விரைவு ரயில் பயணிகள், தனுஷ்கோடியில் இருந்து கப்பல் சேவை மூலம் இலங்கை சென்று வந்தனர். இந்நிலையில், 1964 டிச.22 புயலால், தனுஷ்கோடி முற்றிலும் அழிந்தது.

இதையடுத்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, ராமேஸ்வரத்தில் இருந்து இதர நகரங்களுக்கு பாம்பன் பாலம் வழியாக மீட்டர் கேஜ் பாதையில் ரயில் போக்குவரத்து தொடர்ந்தது. ரயில் பாதைகள் நவீனமயமாக்கப்பட்டததை தொடர்ந்து ராமேஸ்வரம்-மானாமதுரை 96 கி.மீ. தூர மீட்டர்கேஜ் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 2007 ஆக.12ல் போக்குவரத்து தொடங்கியது. இதன் பயனாக, புவனேஸ்வர், அயோத்தி, ஹுப்ளி, ஓகா உள்பட வடமாநில தொலை தூர ரயில்கள், திருப்பதி உள்ளிட்ட தென் மாநில ரயில்கள், சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 2020 ஜனவரியில் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு மண்டபத்தில் இருந்து அனைத்து ரயில்களும் இயக்கப்பட்டன. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, அதிர்வுகளை கண்டறியும் சென்சார் கருவி பொருத்தப்பட்டு பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரத்திற்கு மித வேகத்தில் ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின. பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் பொருத்திய சென்சார் கருவியில் 2022 டிச.23 அதிகாலை 2.30 மணியளவில் அபாய ஒலி எழும்பியது.

இதனையடுத்து, ராமேஸ்வரம்-பாம்பன் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வடமாநில தொலைதூர ரயில்கள், திருப்பதி, சென்னை, கோவை, கன்னியாகுமரி ரயில்கள் மண்டபத்தில் இருந்தும், திருச்சி, மதுரை பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரத்தில் இருந்து கடந்த ஒரு மாதமாக இயக்கப்பட்டு வருகிறது. பாம்பன் தூக்கு பாலத்தை ஆய்வு செய்த சென்னை ஐஐடி பிரிவினர் தனது ஆய்வறிக்கையை லக்னோவில் உள்ள ரயில்வே உயரதிகாரிகளுக்கு அனுப்பினர். அங்கிருந்து எவ்வித தீர்க்கமான முடிவுகள் எதுவும் தெரிவிக்கப்பட வில்லை.

இதனால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து இன்றுடன் 55 நாட்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தினமும் இயக்கப்படுகிறது. இவ்விரு வழித்தடங்கள் வழியாக இயங்கிய ரயில்கள் மூலம் மண்டபம் முகாம், உச்சிப்புளி, வாலாந்தரவை ஆகிய ஸ்டேஷன்களில் இருந்து பயணித்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் பயணத்தை இழந்துள்ளனர். வாலாந்தரவை வார்டு உறுப்பினர் பகவதி செல்வம், பள்ளி புரவலர் சைவ சரவணன், மண்டபம் முகாம் திமுக பிரமுகர் சத்தியேந்திரன் ஆகியோர் கூறுகையில், ‘கொரோனா பேரிடர் கால ஊரடங்கு அமலின் போது ரயில் பயணத்தை மறந்தோம். பாசஞ்சர் ரயில்களை விரைவு ரயில்களாக இயக்கிய கால கட்டத்தில் எங்கள் ஊர்களுக்கு ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை தொடர்ந்து திருச்சி,மதுரை வழித்தட ரயில்கள் எங்கள் ஊர்களில் நின்று சென்றன. தற்போது பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறால் எங்கள் ஊர்களில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால், இந்த 3 ஸ்டேஷன்களில் நின்று சென்ற ரயில்களில் பயணித்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் பயணத்தை இழந்துள்ளனர். பாசஞ்சர் ரயில்களை மண்டபம் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: