சென்னை: சர்வதேச விண்வெளி மையத்தில் உயிர்கள் வாழ சாத்தியம் இல்லை என கருதப்பட்ட சூழலில் அங்கு நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் இருப்பது சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் நாசா விஞ்ஞானிகளுடன் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பூமியில் இருந்து சுமார் 460 கி.மீ. சுற்றிவரும் சர்வதேச விண்வெளி மையம் 1998-ம் ஆண்டு கட்டப்பட்டது. 4,50,000 கிலோ எடை கொண்ட இந்த விண்வெளி மையம் மணிக்கு சராசரியாக 27,600 கி.மீ. வேகத்தில் பூமியை சுற்றுகிறது. 2000-வது ஆண்டு முதல் விண்வெளி மையத்தில் வீரர்கள் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். வீரர்கள் இங்கிருந்து ஒவ்வொரு நாளும் 16 முறை சூரிய உதயத்தையும், மறைவையும் காண முடியும்.
இங்கு இயற்கையாக உயிர்கள் வாழ இயலாது என்ற சூழலே இதுவரை நிலவி வந்தது. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி. மற்றும் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றன. சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் கார்த்திக் ராமன், மூத்த விஞ்ஞானி டாக்டர்.கஸ்தூரி வெங்கடேஸ்வரன் உடன் இணைந்து இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளார். இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 7 இடங்களில் 3 விண்வெளி விமானங்களில் எடுக்கப்பட்ட நுண்ணுயிர் மாதிரி தரவை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் குறிப்பிடத்தக்க சில முன்னேற்றத்தை சில விஞ்ஞானிகள் எட்டியுள்ளனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள நுண்ணுயிரியான கிளப்சிள நிமோனியா பல்வேறு நுண்ணுயிரிகளுக்கும், குறிப்பாக பண்டோவா வகை பாக்டீரியா வளர்வதற்கு துணை புரிவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கான நுண்ணுயிரிகள் மற்ற நுண்ணுயிரிகளின் பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமாக அமைகின்றன. விண்வெளி நிலையத்தில் உள்ள நுண்ணுயிரிகளை பற்றிய ஆராய்ச்சி விண்வெளி வீரர்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தொடர்பான ஆய்விற்கு உதவும் என கூறப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் நுண்ணுயிரிகள் வளர்வது வேற்று கிரகத்தில் உயிர்கள் வாசிக்க முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிக்கும் பயன்படும் என தெரிவிக்கப்படுகிறது.
