×

கணவருக்கு காதலர் தின பரிசு அளிக்க ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் செங்கல்: யூ-டியூப் பிரபலம் பரபரப்பு புகார்

திருவொற்றியூர்: காதலர் தினத்தையொட்டி கணவருக்கு வழங்குவதற்காக, ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலில் பரிசுப் பொருளுக்கு பதிலாக செங்கல் இருந்ததை கண்டு யூ-டியூப் பிரபலம் கடும் அதிர்ச்சி அடைந்தார். ஏமாற்றம் அடைந்த அவர் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை, மாதவரம் வி.ஜி.கே நகரில் வசிப்பவர் தங்கராஜன். இவரது மனைவி யூ-டியூப் பிரபலம் புகழ் ஹேமா (25). இவர், காதலர் தினத்தையொட்டி, தனது கணவர் தங்கராஜனுக்கு பரிசளிப்பதற்காக  ஆன்லைன் மூலம் பரிசு பொருள் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

ஆனால், நேற்று தான் அவருடைய வீட்டிற்கு பார்சல் வந்தது. பொருளை டெலிவரி செய்த பெண் ஊழியர் ஹேமாவிடம் பார்சலை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் பெற்றுக்கொண்டார். உடனடியாக தான் ஆர்டர் செய்த பொருள் சரியாக உள்ளதா என ஹேமா பிரித்து பார்த்தார். அப்போது அதில் அவர் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக 4 செங்கல் துண்டுகள் கிடந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஹேமா, இதுகுறித்து டெலிவரி செய்த பெண்ணிடம் விசாரித்தார். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துவிட்டு ஆன்லைன் அலுவலகத்தில் வந்து கேட்டுக்கொள்ளுங்கள் என கூறிவிட்டுச் சென்றுவிட்டார். இதை தொடர்ந்து ஹேமா, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, அங்கும் பதில் கிடைக்கவில்லை என தெரிகிறது.

எனவே, ஹேமாவும் அவரது கணவர் தங்கராஜனும் மாதவரம் கணபதி தோட்டத்தில் உள்ள டெலிவரி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த அலுவலர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போது அவர்களும் உரிய விளக்கம் அளிக்காமல்  இருவரையும் தகாத வார்த்தைகள் பேசி அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹேமா மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார், இரு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறார். கணவருக்கு காதலர் தினத்தையொட்டி வழங்க ஆன்லைனில் ஆர்டர் செய்த பரிசுப் பொருளுக்கு பதிலாக பார்சலில் செங்கல் வந்த சம்பவம் ஆன்லைன் வாடிக்கையாளர்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Valentine's Day ,YouTube , Brick in response to online order for husband's Valentine's Day gift: YouTube celebrity complains
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்