திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளை வெளிமாநிலம் தப்பிய கொள்ளையரை தனிப்படை சுற்றி வளைத்தது: வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தகவல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளிகள் பிடிபட்டுள்ளதாகவும், அதுபற்றிய விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 12ம் தேதி இரவு 4 இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களை வெல்டிங் மெஷினால் உடைத்து, அதிலிருந்து ரூ.73 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த கொள்ளையர்களை பிடிக்க 9 சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், திருவண்ணாமலையில் முகாமிட்டுள்ள வடக்கு மண்டல ஜஜி கண்ணன் நேற்று அளித்த பேட்டி:

கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் திருப்பத்தூர் எஸ்பி பாலகிருஷ்ணன், குஜராத் மாநிலம், படோதரா மாவட்டத்தில் வேலூர் எஸ்பி ராஜேஷ்கண்ணன், ஹரியானாவில் திருவண்ணாமலை எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். குற்றவாளிகள் குறித்த உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கோலாரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்து, திருவண்ணாமலை மாவட்டத்துக்கு ஏற்கனவே வந்து முன்னோட்டம் பார்த்து திட்டமிட்டு இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். கோலாரில் 2 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. தப்பிச்சென்ற 6 நபர்களை, குஜராத்தில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறோம்.  இங்கிருந்து கோலார் வழியாக பெங்களூரு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் ஹரியானாவுக்கு தப்பிய 2 பேரிடம் அங்கு விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் ஹரியானாவில் இருந்து வந்துள்ளது உறுதியாகிவிட்டது. விசாரணை விரைவில் முடிவடையும். இதுவரை, யாரையும் கைது செய்யவில்லை. அதற்கான நடைமுறைகள் படிப்படியாக தொடங்கும்.

குற்றவாளிகளின் பெயர் விபரங்களை விரைவில் வெளியிடுவோம். இதில் ஈடுபட்டுள்ள ஒருசிலர் பழைய குற்றவாளிகள். மற்றவர்களின் குற்ற பின்னணிகள் குறித்து விசாரித்து வருகிறோம். குற்றவாளிகளின் புகைப்படங்கள், வீடியோக்கள் கிடைத்துள்ளன. ஹரியானா மாநிலத்தில் மேவாத் பகுதி மிகவும் பதற்றமானது. எனவே, எச்சரிக்கையுடன் குற்றவாளிகளை அணுகினோம். அங்குள்ள போலீஸ் மிகவும் உதவியாகவும், ஒத்துழைப்பாகவும் இருந்தனர். தமிழ்நாடு போலீஸ், தேசிய அளவில் ஒரு பெரிய ஆபரேஷன் செய்து, குற்றவாளிகளில் 2 பேரை தவிர மற்றவர்களை அவர்கள் ஊருக்கு சென்று சேரும் முன்பே பிடித்திருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, ராணிப்பேட்டை எஸ்பி கிரண்சுருதி ஆகியோர் உடனிருந்தனர்.

பெங்களூருவில் இருந்து விமானத்தில் தப்பினர்

திருவண்ணாமலையில் தொடங்கி, கலசபாக்கம், போளூர் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்த வெளி மாநில கும்பல், அங்கிருந்து காரில் கோலார் (கேஜிஎப்) தப்பிச்சென்றனர். பின்னர், அங்கிருந்து பெங்களூரு சென்றவர்கள், விமானம் மூலம் ஹரியானா மற்றும் குஜராத்துக்கு தப்பியுள்ளனர். போளூர் ஏடிஎம் மையத்தில் கொள்ளையை முடித்துவிட்டு, அங்கிருந்து கோலாரில் உள்ள நபருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதுதான், இவர்கள் பிடிபடுவதற்கு ஆதாரமாக அமைந்தது.

தொடர்ந்து, 5 முறை கோலார் செல்போனுக்கு தொடர்பு கொண்டதால் சந்தேகம் அடைந்த போலீசார், கொள்ளையர்கள் தங்கிய ஓட்டலை அடையாளம் கண்டனர். பின்னர், அங்கிருந்து படிப்படியாக முன்னேறி, கொள்ளையர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு சென்று சேரும் முன்பே நெருங்கினர். கொள்ளை கும்பலை சேர்ந்த 10 பேரை திருவண்ணாமலை அழைத்து வர ஏற்பாடு நடந்து வருகிறது.

Related Stories: