அதிமுகவில் எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி ரூ.1 கோடி பேரம் பேசினார்: விரைவில் தங்கமணி, வேலுமணி வீடியோ வெளியாகும்

சென்னை: அதிமுகவில் எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தன்னிடம் ரூ.1 கோடி கேட்டு பேரம் பேசினார் என்ற ஆடியோவை, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு கே.பி.முனுசாமி பதில் சொல்லாவிட்டால் வீடியோவும் வெளியாகும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், வடசென்னை மாவட்ட செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் வைத்து நிருபர்களிடம் கூறியதாவது:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கே.பி.முனுசாமி அளித்துள்ள பேட்டியில், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கட்சிக்கு வந்தால் கூட உண்மையாக உழைப்பாரா என்று கேட்டுள்ளார். கே.பி.முனுசாமிக்கு, அடையாளமே ஓபிஎஸ்தான். இவர் காசு வாங்கிவிட்டு, அன்புமணிக்கு உழைத்து கொடுத்தார். எனவே தான், ஜெயலலிதா உங்களை அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். இப்போது கூட கே.பி.முனுசாமி, அதிமுக தொண்டர்களிடம் பணம் வசூலித்து விட்டு, மாவட்ட செயலாளர் பதவி, எம்எல்ஏ பதவி வாங்கி தருவேன் என்கிறார். எங்க பசை இருக்கிறதோ அங்கு ஒட்டுவார் கே.பி.முனுசாமி. இப்போது எடப்பாடி பக்கம் போய்விட்டார். காரணம், அவரிடம் நிறைய பணம் இருக்கிறது என்பதால்தான். சி.வி. சண்முகம் கூட உழைக்கிறார். அடிக்கடி டெல்லி சென்று கட்சிக்காக வேலை செய்கிறார். இவர் எங்கே உழைக்கிறார்.

நான், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு கே.பி.முனுசாமியிடம் வாய்ப்பு கேட்டேன். அப்போது, கட்டாயம் நான் வாங்கி தருவேன். அதற்காக ரூ.1 கோடி தர வேண்டும் என்று கேட்டார்.  இப்போது என்னிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஒரு கோடி பணம் கேட்ட ஆடியோவை ரிலீஸ் ெசய்கிறேன்.

இதற்கு கே.பி.முனுசாமி பதில் சொல்லவில்லை என்றால், வீடியோவை வெளியிடுவேன். அதாவது, தங்கமணி, வேலுமணியிடம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் கீழ்பாக்கத்தில் பேசிய வீடியோ அது. ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் வேலையை பார்க்க வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து கே.பி.முனுசாமியிடம் தான் பேசிய ஆடிய ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி: அண்ணே கிருஷ்ணமூர்த்தி பேசுகிறேன்.

கே.பி.முனுசாமி: சொல்லுமா.. சொல்லுமா..

கிருஷ்ணமூர்த்தி: அண்ணே ஒன்னுமில்ல, இப்போது ரூ.50 லட்சம் ரெடி பண்ணி இருக்கேன். மதியத்துக்குள்ள மீதி 50 ரெடி பண்ணிட்டு சொல்றேன். இதை எப்படின்னா தரணும்.

கே.பி.முனுசாமி: இப்போ, மதியத்துக்குள்ள 1 கோடி ரூபாய்.

கிருஷ்ணமூர்த்தி: 11 மணிக்குள்ள 50 ரெடி பண்ணிடுவேன். சாயங்காலத்திற்குள் மீதி 50 ரெடி பண்ணிடுவேன். இதை எப்படி எடுத்திட்டு வரணும்.

கே.பி.முனுசாமி: என் மகனை அனுப்பி வைக்கிறேன். இப்போ உடனே அனுப்பி வைக்கட்டுமா.

கிருஷ்ணமூர்த்தி:  இல்லண்ணா. கரெக்டா ஒரு 11 மணிக்கு..

கே.பி.முனுசாமி: இல்லப்பா, இப்போ ஊரில் இருந்து அனுப்பினாதான், கரெக்டா 11 மணிக்கு அங்க வருவான்.

கிருஷ்ணமூர்த்தி: அனுப்பி விட்டுங்கண்ணா.

கே.பி.முனுசாமி: அதான் சொல்றேன் நானு.. (சிரிக்கிறார்) அனுப்பி விடுறேன்.

கிருஷ்ணமூர்த்தி: நன்றிங்கண்ணா..

இவ்வாறு அந்த ஆடியோவில் பேசிக் கொள்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்னொருவருடன் பேசுகிறார். அது வருமாறு:‘‘அண்ணா ஒன்னுமில்லை, கே.பி.முனுசாமியிடம் பேசினேன். அண்ணனும் அவர் தனது மகனை அனுப்புவதாக சொன்னார். இப்ப அவரு (கே.பி.முனுசாமி) எங்க இருக்கிறார். சென்னையில் இருக்கிறாரா? நம்ம முந்த வேண்டாம். அவரே வரட்டும். முதலில் 50 ரூபாய் கொடுப்போம். பிறகு பேசிக்கலாம்.

 நான் பழனி அண்ணனை நம்புகிற மாதிரி இல்ல. அவரு ஒரு மாதிரி டைப்’ என்று பேசும் மற்றொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது.அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கத்தொடங்கியதும், ஓ.பன்னீர்செல்வத்தை விட்டு விட்டு எடப்பாடி ஆதரவாளராக கே.பி.முனுசாமி மாறினார். இப்படி தன்னை பல சந்தர்ப்பங்களில் மாற்றிக் கொண்ட கே.பி.முனுசாமியின் மீது தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக தன்னிடம் ரூ.1 கோடி வாங்கியதாக ஒரு ஆடியோவை வெளியிட்டுள்ளது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னையன் பேசிய ஆடியோ ரிலீஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர், நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசும் ஆடியோவாகும். அதில் பொன்னையன், ‘தொண்டர்கள் எல்லாம் இரட்டை இலை பக்கம்தான் உள்ளனர். தலைவர்கள் பணத்தின் பக்கம் நிற்கின்றனர். அவுங்கவுங்க பணத்தை பாதுகாப்பதற்காக டெல்லியை பிடித்துக்கொண்டு ஆடுகிறார்கள். கொள்ளையடிச்சு கோடீஸ்வரனான பின், பணத்தை பாதுகாப்பதற்கு இப்படி ஆடுறாங்க, தொண்டன் தடுமாறுகிறான்.

சி.வி.சண்முகம் தலைமையில் 19 எம்எல்ஏக்கள் வன்னியர்கள், கொங்கு கவுண்டர்கள் 42 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த 42 பேரில் எடப்பாடி கையில் 9 பேர் மட்டுமே உள்ளனர். மற்றவர்களை எல்லாம், காசு பணத்தை கொடுத்து, காண்ட்ராக்ட் கொடுத்து வேலுமணி, தங்கமணி கையில் வைத்துள்ளனர். இப்படி ஒரு குரூப் சாதி அடிப்படையில் வேலை செய்து கொண்டுள்ளனர். அதனால், கொள்கைகள் எல்லாம் காற்றில் விட்டுவிட்டு தனது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக எடப்பாடி ஓடிக் கொண்டிருக்கிறார்’’ என்று கூறியிருந்தார். 

Related Stories: