ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்தின் போது நோயாளிகள் பொதுமக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் : தீயணைப்புதுறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அவசரகால வெளியேறும் பயிற்சிக்கான வழிகாட்டு நடைமுறைகள் குறித்த ஒத்திகை  நடைபெற்றது. தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஒத்திகை நிகழ்வில் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்படாமல் நோயாளிகள் உதவியாளர்களை பாதுகாப்பாக எப்படி வெளியேற்றுவது, மருத்துவமனையின் பிறப்பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுப்பது, பல்வேறு வகையிலான மீட்பு முறைகள் மற்றும் தீயணைப்பான்களை கையாளுதல் குறித்த செயல்முறை விளக்கம் தத்ரூபமாக தீயணைப்பு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக காண்பிக்கப்பட்டது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தீயணைப்புத் துறையின் வடமண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன்:

தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு பொதுமக்களை முன்கூட்டியே காக்க வேண்டும், தீயை விரைந்து அணைப்பதற்கான முறைகள் குறித்து தணிக்கையாய்வு மேற்கொள்ளப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஐந்தாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது போன்று ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது. சென்னையில் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் தீ தணிக்கை  ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணிராஜன் கூறியதாவது: இந்த மாதிரி ஒத்திகை நிகழ்வு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தீ விபத்து நிகளும் பொழுது ஏற்படக்கூடிய சவால்களை சமாளிப்பதற்கு இது மிகுந்த உதவியாக இருக்கும். அதேபோன்று தீ விபத்து ஏற்பட்டால் அதற்குரிய  சிகிச்சை முறைகளை தயாராக வைத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் ஒவ்வொரு தளத்திலும் அசெம்பிள் பாயிண்ட் என்று சொல்லக்கூடிய இடத்தில் எவ்வாறு நோயாளிகளை ஒன்று திரட்டுவது என்பது குறித்தும் ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

Related Stories: