
அகர்தலா: இந்த ஆண்டுக்கான முதல் தேர்தல் நேற்று திரிபுராவில் நடந்தது. இதில் 86 சதவீத வாக்குப்பதிவு பதிவாகி இருக்கும் என்று கருதப்படுகிறது. திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கம் அதிகம். அங்கு 27 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் ஆட்சி நடந்தது. 2018 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியிடம் இருந்து பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. மாணிக் சாகா முதல்வராக உள்ளார். திரிபுரா சட்டப்பேரவை பதவிகாலம் அடுத்த மாதம் 22ம் தேதி முடிவடைகிறது.
இதையடுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. திரிபுரா தேர்தலில் பா.ஜனதா கட்சி மாநில கட்சியான ஐ.பி.எப்.டி. எனப்படும் திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி என்ற கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ. 55 இடங்களிலும், திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி 6 இடங்களிலும் வேட்பாளரை நிறுத்தின. இரு கட்சிகளும் அம்பிநகர் தொகுதியில் மட்டும் நேருக்குநேர் மோதுகின்றன.
இதுவரை எதிர்எதிராக களத்தில் நின்ற காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த தேர்தலில் பா.ஜ.வை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைத்துள்ளன. கம்யூனிஸ்டு 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திரிபுராவில் சமீப காலமாக செல்வாக்கு பெற்று வரும் திப்ரா மோத்தா என்ற கட்சி 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பழங்குடியின மக்களிடம் தனி செல்வாக்குடன் திகழும் இந்த கட்சி மற்ற 2 கூட்டணிகளுக்கும் கடும் சவால் விடுத்துள்ளது. இதனால் திரிபுரா தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. 3 கூட்டணிகளிலும் மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த ஒரு மாதமாக அந்த மாநிலத்தில் விறுவிறுப்பான பிரசாரம் நடைபெற்றது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 20 பெண் வேட்பாளர்கள் உட்பட 259 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்காளர்கள் 3,337 வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர். மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, திரிபுரா தேர்தலில் சுமார் 81.11 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இருப்பினும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் ஓட்டு போட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எனவே ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு மேலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பதிவான ஓட்டுகள் 86 சதவீதமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 2018 சட்டப்பேரவை தேர்தலில் திரிபுராவில் 79 சதவீத வாக்குகள் பதிவானது. அதை விட இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. திரிபுரா தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.
* இந்தியாவின் வடகிழக்கில் உள்ள சிறிய மாநிலங்களில் திரிபுராவும் ஒன்று.
* 10 ஆயிரத்து 491 கி.மீ. பரப்பளவு கொண்ட இந்த மாநிலம் 8 மாவட்டங்களை கொண்டது.
* திரிபுரா மாநிலத்தில் சுமார் 41 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் சுமார் 28.13 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள்.
* சுமார் 31 ஆயிரம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 400 கம்பெனி ஒன்றிய படைகள் குவிக்கப்பட்டு இருந்தது.
* தேர்தல் தொடர்பாக 2 இடங்களில் நடந்த மோதலில் 3 மார்க்சிஸ்ட் கட்சியினர் காயம் அடைந்தனர்.
புரு மக்களுக்கு ஓட்டுரிமை
திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் இந்த முறை மிகவும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 2019 மக்களவை தேர்தலில் நடந்த வன்முறை காரணமாக 168 இடங்களில் மறுஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. இந்த முறை சிலசில தகராறு தவிர பெரிய வன்முறை நடக்கவில்லை. திரிபுராவில் அதிக அளவு உள்ள புரு இன புலம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இந்த தேர்தலில் வழங்கப்பட்டது.
எல்லைகளுக்கு சீல்
திரிபுரா மாநிலத்தை சுற்றிலும் அமைந்துள்ள வங்கதேசம் மற்றும் அசாம், மிசோரம் மாநிலங்களின் எல்லைகள் அமைந்துள்ளன. இந்த எல்லைப் பகுதிகள் அனைத்தும் ஓட்டுப்பதிவை முன்னிட்டு சீல் வைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்பு கருதி பதட்டமான 1,100 வாக்குச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 97 வாக்குச் சாவடிகள் முழுக்க முழுக்க பெண் அதிகாரிகளால் கையாளப்பட்டன.